பள்ளி, கல்லுாரி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி துவக்கம்
பள்ளி, கல்லுாரி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி துவக்கம்
ADDED : மே 07, 2025 12:25 AM

சென்னை:'தமிழகம் முழுதும், பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் சரியாக உள்ளனவா என, ஆய்வு செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் குறைபாடு இருந்தால், எப்.சி., வழங்கப்படாது' என, போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லுாரி வாகனங்கள், நல்ல நிலையில் உள்ளனவா என, ஆண்டுதோறும் சோதனை செய்யப்படும்.
போக்குவரத்து துறை, கல்வித்துறை, போக்கு வரத்து போலீசார் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், நேரில் சென்று பள்ளி வாகனங்களை ஆய்வு செய்வர். பாதுகாப்பு குறைபாடு உள்ள வாகனங்களை இயக்க அனுமதி கிடையாது.
அண்ணா நகர்
இந்த ஆண்டு, பள்ளி, கல்லுாரி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி, மாநிலம் முழுதும் துவக்கப்பட்டுள்ளது. சென்னையில் மீனம்பாக்கம், அண்ணா நகர் என, பல்வேறு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட, பள்ளி, கல்லுாரி வாகனங்களில் சோதனை நடத்தப்படுகிறது.
இதுகுறித்து, தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு, 34,900க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்களை, அனைத்து மாவட்ட வருவாய் அலுவலர், கல்வி அதிகாரிகள், போக்குவரத்து போலீசார் முன்னிலையில், சோதனை செய்யும் பணி துவங்கி உள்ளது.
வாகனங்களில் அவசர கால கதவு, ஜன்னல்கள், படிகள், தீயணைப்பு கருவிகள், முதல் உதவிப்பெட்டி, ஹேண்ட் பிரேக், வேகக் கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்டவற்றின் செயல்பாடுகள், ஆய்வு செய்யப்படுகின்றன.
கோடை விடுமுறை முடிந்து, பள்ளி, கல்லுாரிகள் திறப்பதற்கு முன்பே, அனைத்து பள்ளி, கல்லுாரி வாகனங்களிலும் ஆய்வு செய்து, அதன் அறிக்கையை போக்குவரத்து ஆணையரக அலுவலகத்துக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனுமதி மறுப்பு
வாகனங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், எப்.சி., எனப்படும் தகுதிச் சான்று அனுமதி மறுக்கப்படுகிறது. பாதுகாப்பு குறைபாடுகளை சரி செய்து, மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே, அந்த வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.