அஜித்குமார் கொலை வழக்கு தடை கோரி இன்ஸ்பெக்டர் மனு
அஜித்குமார் கொலை வழக்கு தடை கோரி இன்ஸ்பெக்டர் மனு
ADDED : செப் 16, 2026 03:10 AM
மதுரை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி யம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் டி.எஸ்.பி., உள்ளிட்ட 4 போலீசாரை காவலில் வைக்க மதுரை கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு தடை கோரி இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.
மடப்புரம் பத்திர காளியம்மன் கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதா காரிலிருந்த நகை திருடுபோனதாக திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். கோயில் காவலாளியாக இருந்த அஜித்குமாரை 2025 ஜூன் 27ல் போலீசார் விசாரித்தனர். தனிப்படை போலீசார் தாக்கியதில் அவர் இறந்தார். சி.பி.ஐ., விசாரிக்கிறது. போலீஸ்காரர்கள் ராஜா, ஆனந்த், சங்கரமணி கண்டன், பிரபு, கண்ணன், போலீஸ் வேன் டிரைவர் ராமச்சந்திரன் கைதாகி மதுரை மத்திய சிறையில் உள்ளனர்.
மானாமதுரை டி.எஸ்.பி., சண்முக சுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார், சிறப்பு எஸ்.ஐ., சிவக்குமார், ஏட்டு இளையராஜா கூடுதல் எதிரிகளாக சி.பி.ஐ., தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டனர். மதுரை 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. அந்நீதிமன்றத்தில் செப்.,10ல் ராஜா உள்ளிட்ட 10 பேர் மீதும் கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. சண்முக சுந்தரம், ரமேஷ்குமார், சிவகுமார், இளையராஜாவை செப்.,16 வரை நீதிமன்ற காவலில் வைக்க அந்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கு தடை கோரி ரமேஷ்குமார் உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.
நீதிபதி பி.முருகன் பிறப்பித்த உத்தரவு: கீழமை நீதிமன்றத்தில் சாட்சிகளை விசாரணைக்கு ஆஜர் படுத்த தேவையில்லை. அந்நீதிமன்றம் தரப்பில் வழக்கு ஆவணங்களை செப்.,21ல் தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.
