வீடுகள் எண்ணிக்கை கணக்கெடுப்பு: பேராசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
வீடுகள் எண்ணிக்கை கணக்கெடுப்பு: பேராசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
ADDED : ஏப் 17, 2026 04:21 AM

சென்னை: வீடுகள் எண்ணிக்கை கணக்கெடுப்பின்போது, பல்கலை ஆசிரியர்கள், பணியாளர்கள், தங்கள் வீடுகளில், 'ஆன்லைன்' வழியே, சுய கணக்கெடுப்பு மேற்கொள்ள, யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.
நாட்டில், 10 ஆண்டு களுக்கு ஒரு முறை, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். இறுதியாக 2011ம் ஆண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பின், 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக, அந்த பணிகள் தள்ளிப்போனது.
இந்நிலையில், 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதம், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடக்கின்றன. அதற்கு முன்னதாக, வீடுகள் எண்ணிக்கை கணக்கெடுப்பு பணிகள், ஏப்.,1 முதல், செப்.,30 வரை நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுதும் வீடுகள் எண்ணிக்கை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கின.
தமிழகத்தில் தேர்தல் நடப்பதால், வீடுகள் எண்ணிக்கை கணக்கெடுப்பு பணிகள், ஜூலை 17 முதல் ஆக., 30ம் தேதி வரை நடக்க உள்ளன. வீடுகள் எண்ணிக்கை கணக்கெடுப்பு, பொது மக்களே மேற்கொள்ளும் வகையில், 'ஆன்லைன்' வழியே, சுய கணக்கெடுப்பு செய்யும் வசதியை, மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது.
இந்த வசதியை பயன்படுத்தி, பல்கலை பேராசிரியர்கள், பணியாளர்கள், 'ஆன்லைன்' வழியே, சுய கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என, பல்கலை மானியக்குழு அறிவுறுத்தி உள்ளது.
இதற்கான, https://se.census.gov.in என்ற இணையதளத்தில், வீடுகள் எண்ணிக்கை கணக்கெடுப்பு பணி தொடங்கும்போது, 'ஆன்லைன்' வழியே, சுய கணக்கெடுப்பு பணி மேற் கொள்ள, யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.
