'டைப் 1' நீரிழிவு நோயால் பாதிப்பு 2,500 குழந்தைகளுக்கு 'இன்சுலின்' சிகிச்சை
'டைப் 1' நீரிழிவு நோயால் பாதிப்பு 2,500 குழந்தைகளுக்கு 'இன்சுலின்' சிகிச்சை
ADDED : டிச 14, 2024 05:19 AM

சென்னை: ''தமிழகத்தில், 'டைப் 1' நீரிழிவால் பாதிக்கப்பட்ட, 2,500 குழந்தைகளுக்கு, 'இன்சுலின்' ஊசி செலுத்தப்பட்டு வருகிறது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை அடையாறு, டாக்டர் எம்.ஜி.ஆர்., ஜானகி கலை அறிவியல் கல்லுாரியில், ரோட்டரி சங்கம் சார்பில், உலக நீரிழிவு நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிகழ்ச்சியை துவக்கி வைத்து, அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:
தமிழகத்தில் நீரிழிவு நோயாளிகள் நலன் காக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி, மக்களை தேடி மருத்துவம் திட்டம் துவக்கப்பட்டு, சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, வீடுகளுக்கே சென்று மருந்துகள் அளிக்கப்படுகின்றன.
இத்திட்டத்தில், 49.46 லட்சம் சர்க்கரை நோயாளிகள், 44.46 லட்சம் உயர் ரத்த அழுத்த நோயாளிகள் என, 94.08 லட்சம் பேர் சிகிச்சை பெறுகின்றனர். இத்திட்ட பயனாளிகள் எண்ணிக்கை, இரண்டு கோடியை நெருங்கி வருகிறது.
அதேபோல், 'டைப் 1' நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, 'இன்சுலின்' வழங்கும் திட்டம் துவக்கப்பட்டது.
இத்திட்டத்தில், 2,500 குழந்தைகளுக்கு இன்சுலின் ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல், நீரிழிவு நோயாளிகளுக்கான, 'பாதம் பாதுகாப்போம்' திட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனை வசதி செய்யப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாக, உலகளவில் நீரிழிவு நோயாளிகளை பாதுகாப்பதில், தமிழகம் முன்மாதிரியாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.