பல காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஏஜன்டுகள் இனி பணியாற்ற வாய்ப்பு அறிமுகமாகிறது காப்பீட்டு சட்ட திருத்த மசோதா
பல காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஏஜன்டுகள் இனி பணியாற்ற வாய்ப்பு அறிமுகமாகிறது காப்பீட்டு சட்ட திருத்த மசோதா
ADDED : டிச 03, 2025 12:21 AM

இன்சூரன்ஸ் ஏஜன்டுகள் நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்த சீர்திருத்தங்களை மேற்கொள்ள, காப்பீட்டு சட்ட திருத்த மசோதாவை பார்லி.,யின் குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
தற்போதுள்ள சட்டப்படி, ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனம், ஒரு சுகாதார காப்பீட்டு நிறுவனம் மற்றும் ஒரு பொது காப்பீட்டு நிறுவனம் என, ஒவ்வொரு பிரிவிலும், தலா ஒரு நிறுவனத்துடன் மட்டுமே ஒரு முகவர் இணைந்து பணியாற்ற முடியும்.
அதேநேரம், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் போன்ற பெருநிறுவன முகவர்கள், பல நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற, இந்த சட்டத்தில் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சட்டத் திருத்தம் அங்கீகரிக்கப்பட்டால், காப்பீட்டு முகவர்கள் பல காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். அதாவது, பெருநிறுவன முகவர்களுக்கு சமமான சலுகை கிடைக்கும்.
மேலும், ஒருங்கிணைந்த காப்பீட்டு உரிமம் வழங்குவதும் இந்த மசோதாவில் மற்றொரு முக்கிய பரிந்துரை. இது, ஆயுள், மருத்துவம் மற்றும் பொது காப்பீடு ஆகிய மூன்றையும் ஒரே உரிமத்தின் கீழ், காப்பீட்டு நிறுவனங்கள் விற்க அனுமதியளிக்கும்.
பார்லி., குளிர்கால கூட்டத்தொடரில், இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக அறிமுகப்படுத்தப்படும் என மக்களவை அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காப்பீட்டு முகவர்கள் அதிக வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யவும், சந்தையில் போட்டியையும் புதுமையையும் அதிகரிக்கவும் இந்த சீர்திருத்தங்கள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

