இன்சூரன்ஸ்: சமீபத்திய வரிச்சலுகை பழைய பாலிசிகளுக்கும் பொருந்துமா?
இன்சூரன்ஸ்: சமீபத்திய வரிச்சலுகை பழைய பாலிசிகளுக்கும் பொருந்துமா?
ADDED : அக் 12, 2025 11:28 PM

என் 'எல்.ஐ.சி., ஜீவன் உமங்' பாலிசியில், ஆண்டுதோறும் 2 லட்சம் ரூபாய் பிரீமியத்திற்கு, 4,500 ரூபாய் ஜி.எஸ்.டி., யாக 2022ம் ஆண்டிலிருந்து கட்டி வருகிறேன். இன்னும் 11 ஆண்டுகள் கட்ட வேண்டும். சமீபத்திய வரிச்சலுகை பழைய பாலிசிகளுக்கும் பொருந்துமா, அல்லது தொடர்ந்து வரி கட்ட வேண்டுமா?
மு. பாலமணிகண்டன், மதுரை.
பெரிய மாற்றம் ஏற்படும்போது, இதுபோன்ற பல சந்தேகங்களும், கேள்விகளும் எழுகின்றன. எந்தவொரு பொருள் அல்லது சேவைக்கும், உங்கள் பணம் செலுத்த வேண்டிய நாளில் நிலுவையில் உள்ள விகிதத்தில் நீங்கள் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும்.
இதுவரை ஆயுள் பாலிசி பிரீமியங்களுக்கு ஜி.எஸ்.டி., இருந்ததால், அதை செலுத்தியுள்ளீர்கள். செப்டம்பர் 22ம் தேதிக்குப் பிறகு செலுத்த வேண்டிய புதுப்பித்தல் பிரீமியங்களுக்கு, சமீபத்திய விகித திருத்தங்களின்படி, நீங்கள் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டியதில்லை. ஆம், இது உங்களிடம் ஏற்கனவே உள்ள பாலிசிகளுக்கும் பொருந்தும்.
சமீபத்திய காப்பீடு ஜி.எஸ்.டி., குறைப்பு, கார், இருசக்கர வாகனங்களுக்கு பொருந்துமா? 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக ஜி.எஸ்.டி., குறைக்கப்படுமா, பிரீமியம் குறைய வாய்ப்புள்ளதா?
சுவாமிநாதன், மதுரை.
கடந்த செப்டம்பர் 22 முதல், ஜி.எஸ்.டி., விலக்கு என்பது தனிநபர் மருத்துவக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீட்டுக்கான பிரீமியங்களுக்கு மட்டுமே பொருந்தும். வாகனக் காப்பீட்டுக்கான பிரீமியத்திற்கு, பழைய ஜி.எஸ்.டி., விகிதத்தை தொடர்ந்து செலுத்த வேண்டும்.
மோட்டார் காப்பீட்டு பிரீமியம் விகிதக் குறைப்பு என்பது ஜி.எஸ்.டி.,க்கு தொடர்பில்ல்லாத முற்றிலும் வேறு விஷயம்.
மோட்டார் காப்பீட்டில் பிரீமியம் குறையும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
காரணம், காப்பீட்டு நிறுவனங்கள் சந்திக்கும் கிளைம் செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. பழுதுபார்க்கும் செலவுகள், உதிரிபாகங்களின் விலை ஆகியவை அதிகரிப்பதே இதற்கான முக்கிய காரணங்கள்.
மோட்டார் பொறுப்பு காப்பீட்டுக்கான பிரீமியம் விகிதத்தை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1-ஆம் தேதி காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் மதிப்பீடு செய்து தேவைப்பட்டால் மாற்றுகிறது. இந்த ஆண்டு அவை உயர வாய்ப்புள்ளதாகத்தான் தெரிகிறது.
என் வயது 43. எல்.ஐ.சி., யின் ஜீவன் ஆனந்த் காப்பீடு திட்டத்தில் 27 வயது முதல் பிரீமியம் செலுத்தி வருகிறேன். இருபது ஆண்டுகள் கழித்து எனக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்?
சுரேஷ், மின்னஞ்சல்.
உங்கள் ஜீவன் ஆனந்த் பாலிசி என்பது இரண்டு வகை காப்பீடுகள் இணைந்த ஒன்றாகும். இதன் முதிர்வுத் தொகை, பொதுவாக உங்கள் பாலிசியின் காப்பீட்டுத் தொகை + ஆண்டுதோறும் அறிவிக்கப்படும் போனஸ் + இறுதி போனஸ் ஆகியவற்றின் கூட்டுத்தொகையாக இருக்கும்.
உங்கள் தனிப்பட்ட பாலிசியின் கீழ் நீங்கள் பெறப்போகும் சரியான முதிர்வுத் தொகை, உங்கள் பாலிசியின் காப்பீட்டுத் தொகை, பாலிசி கால அளவு, எல்.ஐ.சி., ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கும் போனஸ் விகிதம் மற்றும் (அறிவிக்கப்பட்டால்) இறுதி போனஸ், ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடும்.
எல்.ஐ.சி., இணையதளத்திலும், பல காப்பீட்டு விற்பனையாளர்களின் இணைய தளங்களிலும் ஆன்லைன் கணக்கீட்டு கருவிகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி, நீங்கள் ஒரு தோராயமான தொகையை அறிந்து கொள்ளலாம்.
ஆனால், நீங்கள் பெறவேண்டிய சரியான தொகையை அறிய, உங்கள் பாலிசி இருக்கும் எல்.ஐ.சி., கிளையை அணுகலாம். உங்கள் காப்பீட்டு முகவர் இதற்கு உதவுவார். மேலும் ஜீவன் ஆனந்த் என்பது இரண்டு பகுதிகள் கொண்டது: எண்டோவ்மென்ட் காப்பீடு - இதன் முதிர்வுத் தொகை மேலே கூறியதுபோல் வழங்கப்படும்.
முழு ஆயுள் காப்பீடு- முதிர்வுக்குப் பிறகும், (நீங்கள் கூறிய 20 ஆண்டுகள்), இந்த பாலிசி தொடர்ந்து ஆயுள் காப்பீடு வழங்கும். இந்த பகுதியின் கீழ், நீங்கள் 99 வயதுக்குள் மறைந்தால், உங்கள் பாலிசி தொகை உங்கள் நியமனதாரருக்கு வழங்கப்படும். நீங்கள் அந்த வயது வரை வாழ்ந்தால், அந்தத் தொகை உங்களுக்கே வழங்கப்படும்.