ADDED : நவ 06, 2024 10:57 PM
சென்னை:மத்திய, மாநில மருத்துவ காப்பீடு திட்டங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் மருத்துவ காப்பீடு திட்டங்களில், 'அலோபதி' மருத்துவ சிகிச்சை முறைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
சித்தா, யுனானி, ஆயுர்வேதா, ஹோமியோபதி மற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறை சிகிச்சைகளுக்கு, தனியார் மருத்துவ மனைகளில் கட்டணம் செலுத்தி தான், சிகிச்சை பெறும் நிலை உள்ளது.
இந்நிலையில், இந்திய மருத்துவ முறை சிகிச்சைகளை, மருத்துவ காப்பீட்டில் பெறும் வகையில், மத்திய ஆயுஷ் துறை அமைச்சகம், தாம்பரம் தேசிய சித்தா மருத்துவ நிறுவனம் இணைந்து நடவடிக்கை எடுத்து உள்ளது.
இதுகுறித்து, தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குனர் மீனாகுமாரி, டாக்டர் செந்தில்வேல் ஆகியோர் கூறியதாவது:
மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், ஆயுஷ் மருத்துவ முறை சிகிச்சை பெறும் வசதி, சில வட மாநிலங்களில் உள்ளது. தமிழகத்தில் அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாத நிலை தொடர்கிறது.
எனவே, ஆயுஷ் மருத்துவ முறை சிகிச்சைகளை, காப்பீட்டு திட்டத்தில் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கருத்தரங்கம், தாம்பரம் தேசிய சித்தா மருத்துவமனை வளாகத்தில், நாளை நடக்க உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.