விளையாட்டு, கலை மீதான ஆர்வத்தால் பள்ளி மாணவர் இடைநிற்றல் குறைந்தது: கல்வி அமைச்சர் மகேஷ் தகவல்
விளையாட்டு, கலை மீதான ஆர்வத்தால் பள்ளி மாணவர் இடைநிற்றல் குறைந்தது: கல்வி அமைச்சர் மகேஷ் தகவல்
ADDED : ஜன 28, 2025 05:49 AM

சென்னை : மாணவர்களிடம் விளையாட்டு, கலை ஆர்வம் அதிகரிப்பால், இடைநிற்றல் கணிசமாக குறைந்துள்ளதாக, அமைச்சர் மகேஷ் கூறினார்.
அரசு பள்ளிகளில், 22,931 'ஸ்மார்ட் கிளாஸ் ரூம்' என்ற திறன்மிகு வகுப்பறைகள் அமைக்க, அரசு முடிவு செய்தது. இத்திட்டம், கடந்த ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது. திட்டம் நிறைவடையும் வகையில், 22,931வது ஸ்மார்ட் கிளாஸ் ரூம், சென்னை துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி யில் நேற்று அமைக்கப்பட்டது.
அதை திறந்து வைத்து, அமைச்சர் மகேஷ் பேசியதாவது: இத்திட்டம் கடந்த ஆண்டு, முதல் கட்டமாக விழுப்புரம், அரியலுார், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் துவக்கப்பட்டது. இந்த பள்ளியில், 22,931வது ஸ்மார்ட் கிளாஸ் ரூம் அமைத்து இலக்கை முடித்துள்ளோம். இத்திட்டத்தின் மதிப்பு, 455.32 கோடி ரூபாய். இதன் வாயிலாக, 11.76 லட்சம் மாணவ - மாணவியர் பயன் அடைந்துள்ளனர்.
இதேபோன்று, 519.73 கோடி ரூபாயில், அரசு பள்ளிகளில், 8,209 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த இரண்டு திட்டங்கள் வாயிலாக, 43.89 லட்சம் மாணவ - மாணவியர் பயனடைய உள்ளனர்.
உலக அளவில் உள்ள அறிவியலை கற்றுக் கொள்ளும் வகையில், ஆசிரியர்கள் வழி நடத்தப்படுகின்றனர். இது, மூன்று ஆண்டுகளில் பள்ளி கல்வித்துறை செய்த சாதனைகளில் ஒன்று. இந்த தொழில்நுட்பம் வாயிலாக, நகர்ப்புறங்களை கடந்து கிராம அளவிலும், 'ஆடியோ' வாயிலாக பாடம் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டோடு ஒப்பிடும் போது, 2024ல் இடைநிற்றல் குறைந்துள்ளது.தேர்தல் நேரத்தில் அறிவித்த ஏழு உறுதி மொழிகளில், நான்காவது உறுதி மொழி கல்வி, மருத்துவம் சார்ந்தது. பள்ளி மாணவ - மாணவியரிடம், விளையாட்டு, கலை உள்ளிட்டவற்றில் ஆர்வம் ஏற்படுத்தி, இறுக்கமான சூழல் இல்லாமல் பார்த்துக் கொண்டோம். இதனால், 16 சதவீதத்தில் இருந்த இடைநிற்றல், 5 சதவீதத்திற்கும் கீழாக குறைந்துள்ளது. இவர் அவர் பேசினார்.

