தங்கம் விலை உயர்வால் திருப்பம்; நகை கடனுக்கு வட்டி செலுத்த ஆர்வம்
தங்கம் விலை உயர்வால் திருப்பம்; நகை கடனுக்கு வட்டி செலுத்த ஆர்வம்
ADDED : அக் 22, 2024 02:58 AM
சென்னை : கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வாங்கிய பலர், வட்டி செலுத்தாமல் அலட்சியம் காட்டினர். தற்போது, தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நகை ஏலம் போவதை தடுக்க வட்டி செலுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதனால், ஆறு மாதங்களுக்கு மேலாக வட்டி செலுத்தாமல் இருந்த 4 லட்சம் பேர், கடந்த ஒரு மாதத்தில் வட்டி செலுத்தி உள்ளனர்.
கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், தங்க நகை அடமானத்தில் நகைக்கடன் வழங்கப்படுகிறது. அதன்படி, ஆறு மாதம், ஓராண்டு என, இரு பிரிவுகளில் நகைக்கடன்கள் வழங்கப்படுகின்றன.
இதில், ஆறு மாத பிரிவில் கடன் வாங்குவோருக்கு தங்கம் மதிப்பில், 75 சதவீதமும்; ஓராண்டு பிரிவில் கடன் வாங்குவோருக்கு கிராமுக்கு, 5,000 ரூபாயும் கடன் வழங்கப்படுகிறது.
இரு பிரிவுகளிலும் மாதம் சராசரியாக, 15 லட்சம் பேர் நகை கடன் வாங்குகின்றனர். அதில், 60 - 70 சதவீதம் பேர் உரிய காலத்தில் கடனுக்கு வட்டி செலுத்தி வருகின்றனர்.
மீதி பேர், ஆறு மாதம், ஓராண்டு என, கடன் காலம் முடியும்பட்சத்தில் வட்டி செலுத்துகின்றனர். அதிலும் சிலர், அசல் மற்றும்வட்டி செலுத்தாமல் காலம் தாழ்த்தும்பட்சத்தில், வங்கியில் இருந்து, 'நோட்டீஸ்' அனுப்பிய பின் வட்டி செலுத்துகின்றனர்.
தற்போது, தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 22 காரட் ஆபரண தங்கம் சவரன் விலை எப்போதும் இல்லாத வகையில், 58,000 ரூபாயை தாண்டியுள்ளது.
எனவே, கூட்டுறவு நிறுவனங்களில் நகை கடன் வாங்கியவர்களில் அசல், வட்டி செலுத்தாமல் அலட்சியம் காட்டி வந்தவர்கள், தங்களின் நகை ஏலம் போகாமல் பாதுகாக்க வட்டி செலுத்தி வருகின்றனர்.
இதனால், ஆறு மாதங்களுக்கு மேலாக வட்டி செலுத்தாமல் இருந்த நான்கு லட்சம் பேர், கடந்த ஒரு மாதத்தில் நகையை பாதுகாக்க வட்டி செலுத்தியுள்ளனர்.