சீமான் மீது விஜயலட்சுமி புகார்: விசாரணைக்கு இடைக்கால தடை
சீமான் மீது விஜயலட்சுமி புகார்: விசாரணைக்கு இடைக்கால தடை
ADDED : மே 03, 2025 01:05 AM

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, நடிகை விஜயலட்சுமி கூறிய புகார் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு தொடரும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேல்முறையீடு
பாலியல் வன்கொடுமை மற்றும் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, நடிகை விஜயலட்சுமி புகார் தெரிவித்து இருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கை ரத்து செய்ய மறுத்ததுடன், 12 வாரத்திற்குள் போலீசார் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக, சீமான் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சீமானுக்கு எதிராக விஜயலட்சுமி கூறியுள்ள புகார்கள் முக்கியமானவை என தெரிவித்ததுடன், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
மீண்டும் விசாரணை
இந்த வழக்கானது, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கில் தொடர்புடைய அனைவரும் கூடுதல் மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கிய நீதிபதிகள், ஜூலை 31ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.
அதுவரை, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு தொடரும் என்றும் அறிவித்தனர்.