அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மீது வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மீது வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை
ADDED : பிப் 18, 2024 02:27 AM
சென்னை : மேட்டுப்பாளையம்நகராட்சி கமிஷனருடன் வாக்குவாதம் செய்ததாக, அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ., செல்வராஜ் உள்ளிட்டோர் மீது பதிவான வழக்கின் விசாரணைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
வாக்குவாதம்
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில், ஜனவரி 23ல் கமிஷனர் அமுதா, அதிகாரிகள் இடையே ஆலோசனை கூட்டம் நடந்தது.
அப்போது, மேட்டுப்பாளையம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., செல்வராஜ் கமிஷனரை சந்தித்தார். தொகுதி வளர்ச்சி திட்ட பணிகள், எம்.எல்.ஏ., நிதி ஒதுக்கீடு விபரங்களை கேட்டதற்கு பதில் தராதது ஏன் என்று கேட்டார்.
கமிஷனர் அளித்தம் விளக்கம் சரியல்லை என்றும், மூன்று மாதத்திற்கு முன் கொடுத்த கடிதத்தை திருப்பிக் கொடுங்கள் என, கமிஷனரை அவமதிக்கும் வகையில், எம்.எல்.ஏ., தரப்பினர் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, தி.மு.க., - அ.தி.மு.க.,வினரிடையே வாக்குவாதம் முற்றி, கூச்சல், குழப்பத்தில் முடிந்தது.
கமிஷனர் புகார்
இதுகுறித்து, நகராட்சி கமிஷனர் அளித்த புகாரில், மேட்டுப்பாளையம் போலீசார், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ், செல்வராஜ் உட்பட 30 பேர் மீது வழக்கு பதிந்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், விசாரணைக்கு இடைக்கால தடை கோரியும், எம்.எல்.ஏ., செல்வராஜ் உள்ளிட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
உத்தரவு
மனு நீதிபதி என்.ஆனந்த வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.
எம்.எல்.ஏ., செல்வராஜ் சார்பில் வழக்கறிஞர் எம்.முகமது ரியாஸ் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, எம்.எல்.ஏ., செல்வராஜ் உள்ளிட்டோர் மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு, நான்கு வாரங்களுக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.