ஆதிதிராவிட கிறிஸ்துவர்களுக்கு உள் ஒதுக்கீடு: வெள்ளாமை இயக்கம்
ஆதிதிராவிட கிறிஸ்துவர்களுக்கு உள் ஒதுக்கீடு: வெள்ளாமை இயக்கம்
ADDED : மார் 18, 2025 06:56 AM
திருச்சி : “ஆதிதிராவிட கிறிஸ்துவ பறையர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள், சலுகைகள் திட்டமிட்டு மறுக்கப்படுகின்றன,” என்று வெள்ளாமை இயக்க செயலர் தெரிவித்தார்.
வெள்ளாமை இயக்க தலைவர் ஜான், செயலர் ஆரோக்கிய நாதன் ஆகியோர் நேற்று அளித்த பேட்டி:
கிறிஸ்துவர்களின் நலனைக் காக்க ஏற்படுத்தப்பட்ட சிறுபான்மை நல ஆணையத்தில், மக்களுக்காக பணியாற்றக்கூடிய மக்கள் பிரதிநிதிகளை நியமிக்காமல், கிறிஸ்துவ மத பணி செய்யக்கூடிய ஆயர்கள், அருட்தந்தையர்கள் நியமிக்கப்படுவதால், ஆதிதிராவிடர் கிறிஸ்துவர்களுக்கு கிடைக்க வேண்டிய நலத்திட்டங்கள், உரிமைகள், சலுகைகள் திட்டமிட்டு மறுக்கப்படுகின்றன.
இனிவரும் காலத்தில், ஆதிதிராவிட கிறிஸ்துவ பறையர்களுக்கு இன சுழற்சி முறையில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். கடந்த 2007ம் ஆண்டு, தமிழக முதல்வர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்ட கிறிஸ்துவர்களுக்கான உள் ஒதுக்கீடு, கிறிஸ்துவ மத அமைப்பு தலைவர்களால் வேண்டுமென்றே நிராகரிக்கப் பட்டது.
கிறிஸ்துவ ஆதிதிராவிட மக்கள் நல பிரதிநிதிகளின் முடிவு கருத்தில் கொள்ளப்படாமல், பிற மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஆயர்கள் கருத்துகளின் அடிப்படையில் உள் ஒதுக்கீடு மறுக்கப்பட்டது.
எனவே, கிறிஸ்துவ மதத்தில் பெரும்பான்மையாக உள்ள ஆதிதிராவிட கிறிஸ்துவ மக்களுக்கு, மக்கள் தொகை அடிப்படையில் உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மாவட்ட சமூக நல அலுவலகத்தில், ஆதிதிராவிட கிறிஸ்துவர்களுக்கென மாவட்டந்தோறும் ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள மாநில கட்சிகளும், ஆதிதிராவிட கிறிஸ்துவ பறையர்களுக்கும் பொது தொகுதியில் போட்டியிட கட்சியில் வாய்ப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.