ADDED : செப் 26, 2025 02:39 AM

சென்னை:பாக் வளைகுடா பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள கடற்பசு காப்பகத்துக்கு, ஐ.யு.சி.என்., எனப்படும் சர்வேதேச இயற்கை பாதுகாப்பு யூனியன் அங்கீ காரம் அளித்துள்ளதாக, வனம் மற்றும் சுற்றுச் சூழல் து றை செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்தார்.
வங்காள விரிகுடாவில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே, கடற்பசு காணப்படுகிறது. தமிழகத்தை ஒட்டிய, பாக் வளைகுடா பகுதியில், 448 சதுர கி.மீ., பரப்பை கடற்பசு காப்பகமாக, தமிழக அரசு, 2022ல் அறிவித்தது.
இதையடுத்து, இங்கு கடற்பசுக்கள் வாழ்க்கை, நடமாட்டம், அவை சந்திக்கும் பாதிப்புகள் குறித்த ஆய்வுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்நிலையில், கடற்பசு இருப்பு நிலவரம் குறித்த கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப் பட்டுள்ளது.
அதன்படி, தமிழக கடலோரப் பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட கடற்பசுக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டிலேயே முதல்முறையாக அறிவிக்கப்பட்டுள்ள கடற்பசு காப்பகத்துக்கு, சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதற் காக முதல்வர் ஸ்டாலின், தமிழக வனத்துறைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு வெளியிட்டுள்ள அறிவிப்பு:
ஐ.யு.சி.என்., எனப்படும் சர்வதேச இயற்கை பாதுகாப்பு யூனியன், தமிழகத்தின் கடற்பசு காப்பகத்தை அங்கீகரித்து, தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. தெற்கு ஆசியாவில் இத்தகைய அங்கீகாரம் முதல் முறையாக, கடற்பசு காப்பகத்துக்கு கிடைத்துள்ளது.
இதனால், கடற்பசு காப்பகம் குறித்த விபரங்கள், உலக அளவில் முக்கியத்துவம் பெறும்.
இவ்வாறு கூறியுள்ளார்.