ஜல்லிக்கட்டுக்கு சர்வதேச அங்கீகாரம்: இலங்கை கவர்னர் பேட்டி
ஜல்லிக்கட்டுக்கு சர்வதேச அங்கீகாரம்: இலங்கை கவர்னர் பேட்டி
ADDED : ஜன 16, 2024 11:35 PM

சிவகங்கை : இலங்கையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு நடத்தியதின் மூலம், அதற்கு சர்வதேச விளையாட்டிற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது,'' என சிவகங்கை அருகே க.சொக்கநாதபுரத்தில், இலங்கை கிழக்கு மாகாண கவர்னர் செந்தில்தொண்டமான் தெரிவித்தார்.
இவருக்கு சொந்தமான பண்ணை சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே க.சொக்கநாதபுரத்தில் உள்ளது.
அங்கு கர்நாடகா, புலிக்குளம், வத்திராயிருப்பு, புதுக்கோட்டை, கண்ணாபுரம், செம்மால் இன காளைகளை வளர்க்கிறார். இதற்கு கே.ஜி.எப்., புலி, காங்கேயம், பேட்டை காளி, சின்னவர் என பெயரிட்டுள்ளார். காளைகள் உணவிற்காக ஆண்டுக்கு ஒரு காளைக்கு ரூ.80 ஆயிரம் செலவாகிறது. காளைகள் திடகாத்திரமாக இருக்க தினமும் பருத்தி கொட்டை, அரைத்த நெல், கொண்டக்கடலை, உளுந்து, துவரம், பாசிபருப்பு தவிடுகளை வழங்குகின்றனர். இவரது காளைகள் ஜல்லிக்கட்டுகளில் விளையாடி 2 கார்கள், 4 டூவீலர்கள், தங்க காசுகளை பரிசாக வென்றுள்ளது. இச்சிறப்பு பெற்ற காளைகளுக்கு மரியாதை செய்யும் விதமாக, நேற்று பண்ணையில் மாட்டு பொங்கல் கொண்டாடினார். இதற்காக காளைகளை அலங்கரித்து பொங்கல் வைத்து வழிபட்டனர். விழாவில் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றனர்.
தமிழர்களின் கலாசாரம் பாதுகாப்பு
செந்தில் தொண்டமான் கூறியதாவது: இலங்கையில் உள்ள தமிழர்கள் பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் தருகின்றனர். வடகிழக்கில் உள்ள பூர்வீக தமிழர்கள், தமிழகத்தில் இருந்து சென்றவர்கள். பிரிட்டிஷ் காலத்தில் மலையக தமிழர்கள் இலங்கை சென்றனர்.
அனைவருமே நம் கலாசாரத்தை இலங்கையிலும் அப்படியே பாதுகாக்கின்றனர்.இலங்கையில் அனைத்து அனுமதியும் பெற்று, முதல் முறையாக ஜல்லிக்கட்டு நடத்தியுள்ளோம்.
இதன் மூலம் ஜல்லிக்கட்டுக்கு சர்வதேச விளையாட்டுக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது, என்றார்.

