மே மாதம் சர்வதேச சைவ சித்தாந்த மாநாடு: தருமபுரம் ஆதீனம் தகவல்
மே மாதம் சர்வதேச சைவ சித்தாந்த மாநாடு: தருமபுரம் ஆதீனம் தகவல்
UPDATED : பிப் 19, 2025 07:26 AM
ADDED : பிப் 19, 2025 12:31 AM

மயிலாடுதுறை:''தருமபுரம் ஆதீனம், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து நடத்தும் ஆறாவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு, மே 3 முதல் 5ம் தேதி வரை சென்னை காட்டாங்கொளத்துாரில் நடைபெற உள்ளது,'' என, தருமபுரம் ஆதீனம் தெரிவித்துள்ளார்.
தருமபுரம் ஆதீன திருமடத்தில், 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அளித்த பேட்டி:
செந்தமிழும், சிவ நெறியும் வளர்க்கும் ஞானப்பண்ணையாக விளங்கி, சைவ சித்தாந்தத்தை உலகெங்கும் பரவ செய்யும் நோக்கோடு தருமை ஆதீனம் 26வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், 1984ம் ஆண்டு அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தை துவங்கினார்.
இந்நிறுவனம் சார்பில் இதுவரை, தருமபுரம், மலேஷியா, வாரணாசி, மதுரை, சென்னை ஆகிய ஐந்து இடங்களில் மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை, தருமை ஆதீன சைவ சித்தாந்த மாலை நேர கல்லுாரியில் சித்தாந்த வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது தருமபுரம் ஆதீனம், எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து ஆறாவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு, சென்னை காட்டாங்கொளத்துாரில் மே 3, 4, 5 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.
'சங்க இலக்கியங்கள் முதல் சமகால இலக்கியம் வரை சித்தாந்த பதிவுகள்' எனும் பொது தலைப்பின் கீழ் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
மாநாட்டில், சைவ ஆதீனங்களின் குரு மகா சன்னிதானங்கள், பிரதமர், கவர்னர்கள், முதல்வர்கள், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், உள்நாட்டு, வெளிநாட்டு அமைச்சர்கள், சிவாச்சாரியார்கள், பல்கலை பேராசிரியர்கள், சைவ சமய அறிஞர்கள், கோவில் அறங்காவலர்கள், சமய ஆர்வலர்கள் பங்கேற்க உள்ளனர்.
சிங்கப்பூர், மலேஷியா, இலங்கை, லண்டன், ஜெர்மன், சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா, நைஜீரியா, மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அறிஞர்களும், ஆர்வலர்களும் பங்கேற்கின்றனர்.
மாநாட்டுக்கான சிறப்பு மலர், ஆய்வாளர்களின் ஆய்வு கட்டுரைகள் அடங்கிய ஆய்வு கோவை மற்றும் 10க்கும் மேற்பட்ட நுால்கள் வெளியிடப்பட உள்ளன. முதற்கட்டமாக சிறப்பு மலர் குழு, கருத்தரங்க குழு, நுால் வெளியீட்டு குழு என, மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

