'லிப்ட்' கொடுத்த மாணவரை தாக்கிய போதை எஸ்.எஸ்.ஐ., துாக்கியடிப்பு
'லிப்ட்' கொடுத்த மாணவரை தாக்கிய போதை எஸ்.எஸ்.ஐ., துாக்கியடிப்பு
ADDED : மார் 24, 2024 11:16 PM
திருச்சி : திருச்சி மாவட்டம், வளநாடு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ.,யாக இருந்தவர் இளங்கோ, 49. இவர், நேற்று முன்தினம் காலை, ஊனையூரில் நடந்த தேரோட்டத்துக்கு பாதுகாப்பு பணிக்கு சென்றார்.
அங்கு மது குடித்து விட்டு, மீண்டும் ஸ்டேஷனுக்கு பைக்கில் வந்தார். வழியில், குரும்பப்பட்டி என்ற இடத்தில் அவரால் பைக்கை ஓட்ட முடியவில்லை. இதனால், பைக்கை நிறுத்தி விட்டு, அங்கே கிடந்த கட்டிலில் படுத்திருந்தார். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த, 19 வயது கல்லுாரி மாணவரை நிறுத்தி, தன்னை வளநாடு போலீஸ் ஸ்டேஷனில் விடுமாறு கேட்டார்.
மாணவரும் பைக்கில் எஸ்.எஸ்.ஐ.,யை ஏற்றி வந்து, ஸ்டேஷன் வாசலில் இறக்கி விட்டார். அப்போது மாணவனை ஸ்டேஷனுக்குள் அழைத்த எஸ்.எஸ்.ஐ., இளங்கோ, அந்த மாணவரை போதையில் தாக்கினார்.
இதுகுறித்து, மாணவர் தன் குடும்பத்தாருக்கு தகவல் தர, 50க்கும் மேற்பட்டோர் வளநாடு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். மணப்பாறை டி.எஸ்.பி., மரியமுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போதையில் இருந்த எஸ்.எஸ்.ஐ., இளங்கோவை, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
அவர் பணியில் போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டதால், ஆயுதப்படைக்கு மாற்றி, திருச்சி எஸ்.பி., வருண்குமார் உத்தரவிட்டார்.

