ADDED : மார் 17, 2024 01:45 AM
சென்னை:சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஆன்லைன் முதலீட்டுத் தளமான 'பண்ட்ஸ் இந்தியா' நிறுவனம், அதன் பணியாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் நலத் திட்டங்களை வெளியிட்டுஉள்ளது.
'எம்ப்ளாயீஸ் ஸ்டாக் ஓனர்ஷிப் ப்ளான்' மற்றும் 'தேசிய ஓய்வூதியத் திட்டம்' எனும் இரு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. எம்ப்ளாயீஸ் ஸ்டாக் ஓனர்ஷிப் திட்டம், பங்குகளை வாங்குவதற்கான விருப்பத் தேர்வுகளை பணியாளர்களுக்கு வழங்குகிறது.
தேசிய ஓய்வூதியத் திட்டம் பணியாளர்களின் நல்வாழ்வு மற்றும் நிதிப் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய பண்ட்ஸ் இந்தியா தலைமை செயல் அதிகாரி கிரிராஜன் முருகன், “பண்ட்ஸ் இந்தியா, பணியாளர்களின் தொழில், வாழ்க்கை மேம்பாடு மற்றும் அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கான ஆதரவை வழங்க உறுதி பூண்டுள்ளது.
“அவர்களுக்கான நீண்ட கால நிதிப் பலன்களைப் பகிர்ந்து கொள்வதிலும் உறுதியாக உள்ளது.
“தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய ஓய்வூதியத் திட்டம், நிறுவனத்தால் வழங்கப்பட்டு வரும் பல்வேறு நன்மைகளின் வரிசையில், பணியாளர்களின் நிதிப் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான ஒரு கூடுதல் அடுக்காக அமைந்துள்ளது” என்று தெரிவித்தார்.

