ADDED : நவ 09, 2024 10:27 PM
சென்னை:உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெற, ஓராண்டு கால அனுமதிக்கு, 'தத்கல்' வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், நடைபாதை வியாபாரிகளுக்கு பதிவு கட்டணம் ரத்து செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை கூடுதல் கமிஷனர் தேவபார்த்தசாரதி கூறியதாவது:
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகம், உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெறுவதில், சில முக்கிய திருத்தங்களை அமல்படுத்தி உள்ளது.
அதன்படி, மொத்த வியாபாரிகள், வினியோகஸ்தர்கள், சில்லரை வியாபாரிகள், இருப்பு கிடங்குகள், இறக்குமதியாளர்கள், உணவு பொருட்களை விற்பனை மட்டும் செய்யும் இதர வியாபாரிகள், பெட்டிக் கடை வியாபாரி கள் உள்ளிட்டோர், உடனடியாக உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற, 'தத்கல்' வசதி அறிமுகமாகி உள்ளது.
விண்ணப்பித்தவுடன் ஓராண்டுக்கான அனுமதி வழங்கப்படும். பின், சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் ஆய்வு நடத்தி, நிரந்தர சான்றுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுதொடர்பாக கூடுதல் விபரங்களை, https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த வசதியை, உணவு வணிகர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
மேலும், தெருவில் நடந்து அல்லது தள்ளு வண்டிகளில் உணவு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு பதிவு சான்றிதழ் கட்டணமாக, 100 ரூபாய் பெறப்பட்டது. தற்போது, அந்த கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் இல்லாமலோ அல்லது காலாவதியான உரிமத்துடனோ உணவு வணிகம் செய்வது தண்டனைக்குரியது. அவ்வாறு வணிகம் செய்வோருக்கு, 5,000 முதல் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.