ADDED : ஜூன் 26, 2026 11:54 PM
சென்னை: ஒரே செயலியில், குடும்ப உறுப்பினர்களின் ஆதார் தகவல்களை இணைக்கும் வகையில், மேம்படுத்தப்பட்ட ஆதார் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் கீழ், ஆதார் சேவைகள் உள்ளன. கையில் ஆதார் அட்டை இல்லாத சூழலில், 'எம் - ஆதார்' செயலியில் உள்ள, நம் விபரங்களை காண்பிக்க முடியும்.
இதில், குடும்பத்தில் ஒருவர் விபரம் மட்டுமே இடம் பெறும் வசதி இருந்தது. இந்நிலையில், 'எம் - ஆதார்' செயலி மேம்படுத்தப்பட்டு உள்ளது.
தற்போது, செயலியில் பெயர், வயது அல்லது முகவரியில், எதை பகிர வேண்டும் என்பதை நாம் தேர்வு செய்து, கடவுச்சொல் பயன்படுத்தி, நம் விபரங்களை பாதுகாக்கப்பட்ட கோப்பாக அனுப்ப முடியும்.
சிறப்பம்சமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, ஐந்து நபர்களின் ஆதார் விபரங்களை இணைத்து, தனித்தனியாக பாதுகாப்பாக நிர்வகிக்க முடியும். இணையதளம் இல்லாத நேரத்திலும், இந்த செயலியை பயன்படுத்தலாம்.
