மலையேற்றம் செல்வோர் பதிவுக்கு புதிய இணையதள வசதி அறிமுகம்
மலையேற்றம் செல்வோர் பதிவுக்கு புதிய இணையதள வசதி அறிமுகம்
ADDED : அக் 25, 2024 12:27 AM
சென்னை:வனத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட 40 வழித்தடங்களில், மலையேற்றத்துக்கு செல்வோர் பதிவு செய்வதற்காக, 'ஆன்லைன்' வசதியை, துணை முதல்வர் உதயநிதி நேற்று துவக்கி வைத்தார்.
தமிழகத்தில், 40 மலையேற்ற வழித்தடங்கள் குறித்த வரைபடம் தயாரிக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி, 40 இடங்களுக்கான 'டிஜிட்டல்' வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.
இதில், மலையேற்றத்துக்கு செல்ல விரும்புவோர் பதிவு செய்து, வனத்துறையின் வழிகாட்டுதலுடன் சென்றுவர, புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக உருவாக்கப்பட்ட, www.trektamilnadu.com என்ற புதிய இணையதளத்தை, தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார்.
தமிழகத்தில், 14 மாவட்டங்களில், 40 வழித்தடங்களை அடிப்படையாக வைத்து, தமிழக மலையேற்ற திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.
இதில், எளிதான பகுதி என்று 14 இடங்கள், மிதமான பகுதி என்று 14 இடங்கள், கடினமான பகுதி என்று 12 இடங்கள் வகைபடுத்தப்பட்டு உள்ளன.
இப்பகுதிகளுக்கு செல்ல விரும்புவோர், இதற்கான இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.
இதில் பங்கேற்க, 18 வயத்துக்கு மேற்பட்ட அனைவரும் முன்பதிவு செய்யலாம். 18 வயதுக்கு உட்பட்டவர்கள், பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒப்புதலுடன் பதிவு செய்யலாம்; 10 வயதுக்கு உட்பட்டவர்கள் எளிதாக செல்லக்கூடிய இடங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
அந்தந்த பகுதி உள்ளூர் மக்கள், பழங்குடியினரில் இருந்து, இதற்கான வழிகாட்டிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தேவைப்படும் அனைத்து பொருட்களும் அளிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் பங்கேற்பாளராக பதிவு செய்ய, 700 ரூபாய் முதல், 5,999 ரூபாய் வரை பல்வேறு நிலைகளில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
வனத்துறை சொல்லும் குறிப்பிட்ட இடத்துக்கு பங்கேற்பாளர்கள் சென்றால் போதும். அங்கிருந்து வழிகாட்டிகள் அழைத்து செல்வர்.
ஒவ்வொரு வழித்தடம் குறித்த முழுமையான விபரங்களை, வரைபடம் மற்றும் வீடியோக்களாக அறிந்துகொள்ளவும், புதிய இணையதளத்தில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என, வனத்துறை அதிகாரிகள் கூறினர்.