பிரிட்டனில் உயர் கல்வி படிக்க 'பாத்வே' திட்டம் அறிமுகம்
பிரிட்டனில் உயர் கல்வி படிக்க 'பாத்வே' திட்டம் அறிமுகம்
ADDED : ஆக 21, 2024 02:17 AM

சென்னை:''வெளிநாடுகளில் உயர் கல்வி பயில விரும்பும் மாணவர்கள், கல்வி நிறுவனங்களை எச்சரிக்கையுடன் தேர்ந்தெடுக்க வேண்டும்,'' என, 'ஆக்ஸ்போர்டு இன்டர்நேஷனல் எஜுகேஷன் சர்வீசஸ்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மோஹித் கம்பீர் தெரிவித்தார்.
இந்நிறுவனம் சார்பில், பிரிட்டனில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு போன்ற உயர்கல்வி மேற்கொள்ள, 'பாத்வே' திட்டம், சென்னையில் நேற்று துவக்கப்பட்டது.
அது தொடர்பாக, மோஹித் கம்பீர் கூறியதாவது:
பிரிட்டன் பல்கலைகளில், அமெரிக்கா, கனடா, இந்தியாவை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் உயர் கல்வி படித்து வருகின்றனர். தமிழக மாணவர்கள் வெளிநாடுகளில் உயர் கல்வி தொடர விரும்புகின்றனர்.
ஆனால், முறையான அணுகுமுறை இல்லாததால், சில மாணவர்களின் விருப்பம் நிறைவேறுவது இல்லை. வெளிநாடுகளில் உயர் கல்வி தொடர விரும்பும் மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் கல்வி நிறுவனங்கள் குறித்த உண்மை தன்மையை, உறுதி செய்துகொள்ள வேண்டும். கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களிடம் பேசி, கல்வியின் தரத்தை உறுதி செய்ய வேண்டும்.
பெரும்பாலும் இந்திய மாணவர்கள் வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்களில், 'பிஸினஸ் மேனேஜ்மென்ட், கம்ப்யூட்டர் சயின்ஸ்' மற்றும் பொறியியல் பாடப்பிரிவுகளை பயில விரும்புகின்றனர்.
'பாத்வே' திட்டம் என்பது, 12 மாத பயிற்சியாகும். பிரிட்டன் உயர் கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெறும் வகையிலும், ஆங்கில மொழி அறிவு பெறும் வகையிலும் பயிற்சிகள் வழங்கப்படும்.
இந்திய கல்வி முறையை அங்கீகரிக்காத ஐரோப்பிய கல்வி நிறுவனங்கள் கூட, 'பாத்வே' திட்டம் வாயிலாக வழங்கப்படும் பயிற்சியை அங்கீகரித்துள்ளன.
ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்கள் வீதம், நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களை கொண்டு பயிற்சிகள் வழங்கப்படும். பாத்வே திட்டத்தில் பயிற்சி பெற்ற பின், மாணவர்கள் தாங்கள் விரும்பும் பல்கலையில் பட்டப்படிப்பை தொடரலாம்.
படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய, நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அதேபோல், வாய்ப்புள்ள மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட பல்கலை வாயிலாக, கல்வி உதவித்தொகை கிடைக்கவும் வழிவகை செய்து தருகிறோம்.
மேலும் தகவல் பெற, www.oxfordinternationaleducationgroup.com/education-service என்ற இந்த இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வில், ஆக்ஸ்போர்டு இன்டர்நேஷனல் எஜுகேஷன் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி ஆண்டி கால்டுவெல், 'சக்சஸ் பாயின்ட்' நிறுவனர் ராஜதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.