ஜாமினில் வெளியே சுற்றும் ரவுடிகளுக்கு கையெழுத்து போட்டோரிடம் விசாரணை
ஜாமினில் வெளியே சுற்றும் ரவுடிகளுக்கு கையெழுத்து போட்டோரிடம் விசாரணை
ADDED : பிப் 18, 2025 04:24 AM
சென்னை : தலைமறைவு ரவுடிகள் மற்றும் நீதிமன்றங்கள் பிடியாணை பிறப்பித்துள்ள ரவுடிகளை பிடிக்க, அவர்களுக்கு ஜாமின் கிடைக்க உதவிய நபர்களிடம், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அட்டூழியம்
குற்றங்களின் தன்மைக்கு ஏற்ப ரவுடிகள், 'ஏ பிளஸ்', ஏ,பி,சி என, வகைப்படுத்தப்பட்டு உள்ளனர். முன்னர், 27,666 ரவுடிகள் இருந்தனர்.
சமீபத்தில் ரவுடிகள் பட்டியல் மறுவரையறை செய்யப்பட்டபோது, 26,462 ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றனர்.
கடந்த சில மாதங்களாக மாநிலம் முழுதும், ரவுடிகளின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. மாமூல் வசூலிப்பு, 'ஓசி'யில் உணவு கேட்டு ஹோட்டல்களை சூறையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து, நிலையான வழிகாட்டுதல் வழிமுறைகள் தயாரிக்கப்பட்டு, மண்டல வாரியாக ரவுடிகள் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி.,க்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், தலைமறைவு ரவுடிகளை தேடும் பணி, முடுக்கி விடப்பட்டுள்ளது. இப்பணியில் உளவுத்துறை போலீசாரும் ஈடுபட்டுஉள்ளனர்.
கொலை வழக்கு
இதன் பயனாக, சமீபத்தில் நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட, தலைமறைவு ரவுடிகள், 181 பேர் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இப்பணிகள் குறித்து ரவுடிகள் ஒழிப்புப்பிரிவு போலீசார் கூறியதாவது:
ரவுடிகள் சம்பந்தப்பட்ட கொலை வழக்குகளில், போலி குற்றவாளிகள் சரணடைவதை தடுக்க, போலீசாருக்கு, 'செக் லிஸ்ட்' எனப்படும் வழிகாட்டு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.
ரவுடிகளின் பகைமை குழுக்கள், அவர்களின் எதிரிகள், சதி திட்டம் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. ஜாமினில் வெளியே வரும் ரவுடிகள், அதன்பின் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விடுகின்றனர்.
நீதிமன்றங்கள் பிடியாணை பிறப்பித்தும், ஆஜராவது இல்லை. அவர்களை பிடிக்க, அவர்களுக்கு ஜாமின் கிடைக்க உதவிய நபர்கள், 1,800க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடக்கிறது. இவர்கள் ரவுடிகளின் குற்ற செயல்களுக்கு உடந்தையாக இருந்தால், கைது செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

