ADDED : அக் 26, 2024 04:41 AM
சென்னை : லோக்சபா தேர்தலின் போது, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பிடிபட்ட 4 கோடி ரூபாய், ஹவாலா பணமா என்ற கோணத்தில், சவுகார்பேட்டையை சேர்ந்த இருவரிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வாக்குமூலம் பெற்றனர்.
லோக்சபா தேர்தலில், திருநெல்வேலி தொகுதியில், பா.ஜ., வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிட்டார். அப்போது, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், 4 கோடி ரூபாய் பணத்தை, தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர். நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர் உள்ளிட்ட இருவர் சிக்கினர்.
இதுதொடர்பாக, தற்போது சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரிடம் விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
இந்த பண விவகாரம் தொடர்பாக, அக்., 25ல் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, புதுச்சேரி பா.ஜ., - எம்.பி., செல்வகணபதி, சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த சூரஜ், பங்கஜ் லால்வானி ஆகியோருக்கு, 'சம்மன்' அனுப்பினர்.
இந்நிலையில், முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து இருப்பதால், விசாரணைக்கு ஆஜராக, மூன்று மாதங்களுக்கு விலக்கு கேட்டு, செல்வகணபதி கடிதம் அனுப்பி உள்ளார்.
சூரஜ், பங்கஜ் லால்வானி ஆகியோர், சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி., தலைமை அலுவலகத்தில் நேற்று காலை, 11:00 மணிக்கு ஆஜராகினர். ரயிலில் பிடிபட்ட 4 கோடி ரூபாய், ஹவாலா பணமா என அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.