பழைய அடுப்புக்கு பதிலாக புதுசு வீடுகளில் விற்கிறது ஐ.ஓ.சி.,
பழைய அடுப்புக்கு பதிலாக புதுசு வீடுகளில் விற்கிறது ஐ.ஓ.சி.,
ADDED : ஆக 10, 2025 02:25 AM
சென்னை:வீடுகளில் எட்டு ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள பழைய காஸ் அடுப்புகளுக்கு பதிலாக, தள்ளுபடி விலையில் புதிய அடுப்புகள் விற்கும் பணியில், இந்தியன் ஆயில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு தமிழகத்தில், 1.33 கோடி வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
அவர்களுக்கு, 14.20 கிலோ எடையில், காஸ் சிலிண்டர் வினியோகம் செய்யப்படுகிறது. பெரும்பாலான வீடுகளில் பல ஆண்டுகளாக, ஒரே காஸ் அடுப்பை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், பழைய அடுப்புகளின் திறன் குறையும்போது, வழக்கத்தை விட அதிக காஸ் பயன்படுத்தப் படுகிறது.
எனவே, வீடுகளில் பாதுகாப்பற்ற மற்றும் திறன் குறைந்த காஸ் அடுப்புகளை மாற்றும் பணியை, இம்மாதம் முதல் இந்தியன் ஆயில் துவக்கியுள்ளது.
இதன் வாயிலாக, எட்டு ஆண்டுகளாக ஒரே காஸ் அடுப்பு பயன்படுத்தி வருவோரிடம், புதிதாக வாங்குமாறும், 15 ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் வாடிக்கையாளரிடம், கட்டாயம் புதிய அடுப்பு வாங்குமாறும் காஸ் ஏஜென்சிகள் அறிவுறுத்தி வருகின்றன.
இதுகுறித்து, இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: பல வீடுகளில் பயன்பாட்டில் உள்ள காஸ் அடுப்புகள், எட்டு ஆண்டுகளுக்கு மேலானவை என தெரியவந்துள்ளது. இதனால், சிலிண்டர்களின் பாதுகாப்பு மற்றும் திறன் குறைந்திருப்பதால், காஸ் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
எனவே, நவீன மற்றும் உயர் வெப்ப திறன் உடைய காஸ் அடுப்புக்கு மாறுவதன் வாயிலாக, வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு ஒன்று - இரண்டு சிலிண்டர்களை சேமிக்க முடியும்.
காஸ் ஏஜென்சிகளில், எல்.பி.ஜி., உபகரண ஆராய்ச்சி மையம் மற்றும் ஐ.எஸ்.ஐ., சான்றளிக்கப்பட்ட இரண்டு பர்னர், மூன்று பர்னர் காஸ் அடுப்புகள் விற்கப்படுகின்றன. பழைய அடுப்பை கொடுத்து விட்டு, புதிதாக வாங்கினால், 500 ரூபாய் வரை தள்ளுபடி தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.