ADDED : மார் 25, 2025 12:42 AM
சென்னை: ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரால், இரவில் மின் தேவை கூடுதலாக, 200 - 250 மெகா வாட் வரை அதிகரித்து உள்ளது.
தமிழக மின் தேவை, தினமும் சராசரியாக, 16,000 மெகா வாட்டாக உள்ளது. இது, கோடை காலத்தில், 'ஏசி' சாதன பயன்பாடு அதிகரிப்பால், 20,000 மெகா வாட்டை தாண்டுகிறது. இம்மாதம் முதல் வெயில் கடுமையாக உள்ளது.
பள்ளிகளில் பொதுத்தேர்வு, சுட்டெரிக்கும் வெயில், மின் வாகனங்கள் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால், வீடு, அலுவலகங்களில், மின் சாதனங்கள் பயன்பாடு அதிகம் உள்ளது. இதனால், மின் தேவை, 18,000 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் விரும்பி பார்க்கும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள், கடந்த சனிக்கிழமை துவங்கின.
தினமும் பிற்பகலில் துவங்கி, மாலை வரை ஒரு போட்டி; இரவு துவங்கி நள்ளிரவு வரை ஒரு போட்டி என, இரு மாதங்களுக்கு கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதனால், 'டிவி, மொபைல் போன்' போன்றவற்றின் பயன்பாடு அதிகரிப்பால், மின் தேவை கூடுதலாக, 200 - 250 மெகா வாட் வரை அதிகரித்துள்ளது.
இதனால், மின் தேவை நேற்று முன்தினம் இரவு, 17,074 மெகா வாட்டாக இருந்தது. அதற்கு முந்தைய ஞாயிற்றுக் கிழமை, 14,981 மெகா வாட்டகாவும் இருந்தது.