ADDED : ஏப் 06, 2026 04:37 PM
புதுடில்லி:ஏப்ரல் 7 ல் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடக்க இருப்பதால், மத்திய டில்லி பகுதியில் போக்குவரத்து மாற்றங்களை போலீசார் செய்துள்ளனர்.
டில்லி கேபிடல்ஸ் கிரிக்கெட் அணிக்கும், குஜராத் டைட்டான்ஸ் அணிக்கும் இடையே, நாளை இரவு, 7:00 மணி முதல், 10:30 மணி வரை, டாடா ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் நடக்க உள்ளன.
இதை முன்னிட்டு, பகதுார் ஷா ஜாபர் மார்க் மற்றும் ஜேஎல்என் மார்க் இடையே போக்குவரத்து மாற்றங்கள் செய்ய, டில்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
குறிப்பாக, மத்திய டில்லி பகுதியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியம் பகுதியில் போக்குவரத்து மாற்றங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் தார்யாகஞ்ச் மற்றும் டில்லி கேட், டில்லி கேட் - குருநானக் சவுக், ஐ.டி.ஓ., - டில்லி கேட் வரை நாளை தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே, கிரிக்கெட் ஆர்வலர்கள் இந்த வழித்தடங்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, ராஜ்காட் - இந்தியா கேட், துர்க் மேன் கேட் - டில்லி கேட், டில்லி கேட் - ஐ.டி.ஓ., வழித்தடங்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஸ்டேடியத்திற்குள், அதற்கென அனுமதிக்கப்பட்டுள்ள கேட் வழியாக மட்டுமே கிரிக்கெட் ஆர்வலர்கள் அனுமதிக்கப்படுவர். ஸ்டேடியம் உள்ளே வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. மாதா சுந்தரி சாலை, ராஜ்காட் பவர் ஹவுஸ் சாலை, வெலோட்ரோம் சாலையில் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
அந்த இடங்களில் இருந்து கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு சென்று வர, ஷட்டில் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தியிருந்தால், அவை போலீசாரால் இழுத்து செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
