ஐ.பி.எஸ்., அதிகாரி வருண்குமார் அவதுாறு; நாம் தமிழர் கட்சி நிர்வாகி போலீசில் புகார்
ஐ.பி.எஸ்., அதிகாரி வருண்குமார் அவதுாறு; நாம் தமிழர் கட்சி நிர்வாகி போலீசில் புகார்
ADDED : டிச 06, 2024 12:49 AM
சென்னை : டி.ஜி.பி., அலுவலகத்தில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக், 35, நேற்று அளித்த புகார்:
டில்லியில் நடந்த அகில இந்திய காவல் அதிகாரிகளின் கூட்டத்தில் பங்கேற்ற, திருச்சி மாவட்ட எஸ்.பி., வருண்குமார், கடந்த லோக்சபா தேர்தலில், 36 லட்சம் ஓட்டுகள் பெற்று, மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியை, பிரிவினைவாத இயக்கம் என்று பேசி உள்ளார்.
மத்திய பணியாளர் சேவை விதிகளுக்கு எதிராக, நாம் தமிழர் கட்சி மீது, பெரும் காழ்ப்புணர்ச்சியையும், அதீத வெறுப்புணர்வையும் வெளிப்படுத்தி உள்ளார்.
அவர், தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, சட்ட விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஜூலை 10ம் தேதி, திருச்சி சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசாரால், எங்கள் கட்சியின் கொள்கை பரப்பு செயலர் துரைமுருகன் கைது செய்யப்பட்டார்.
அப்போது பறிமுதல் செய்த, அவரது மொபைல் போனில் இருந்த தனிப்பட்ட உரையாடல்களை மூன்றாம் நபர் வாயிலாக, வருண்குமார் வெளியிட்டுள்ளார். மற்றொரு வழக்கில் கைதான, பெலிக்ஸ் ஜெரால்டு என்பவரை, 66 மணி நேரம் சட்டவிரோத காவலில் வைத்துள்ளார்.
தொடர்ச்சியாக, எங்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, அவதுாறு பரப்ப வேண்டும் என்ற குறிக்கோளுடன், தன் பதவியை வருண்குமார் தவறாக பயன்படுத்தி வருகிறார்.
அவரை திருச்சி மாவட்ட எஸ்.பி., பொறுப்பில் இருந்து, உடனடியாக மாற்ற வேண்டும். இனி அவரை சட்டம் - ஒழுங்கு சார்ந்த பதவியில் நியமிக்கக் கூடாது. அவர் மீது தக்க விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.