வரையாடுகள் பிரசவம் எதிரொலி இரவிகுளம் பூங்கா பிப்.1ல் மூடல்
வரையாடுகள் பிரசவம் எதிரொலி இரவிகுளம் பூங்கா பிப்.1ல் மூடல்
ADDED : ஜன 27, 2025 03:52 AM

மூணாறு: கேரள மாநிலம் இரவிகுளம் தேசிய பூங்கா வரையாடுகளின் பிரசவத்திற்காக பிப். 1 முதல் மார்ச் 31 வரை மூடப்படுகிறது.
மூணாறு அருகில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்காவில் அபூர்வ இன வரையாடுகள் ஏராளமாக உள்ளன. அவற்றை பார்க்க பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலைக்கு சுற்றுலாப் பயணிகளை கடும் கட்டுப்பாடுகளுடன் வனத்துறையினர் அனுமதிக்கின்றனர்.
ஆண்டுதோறும் ஜூன், ஜூலையில் வரையாடுகள் இனப்பெருக்கத்தில் ஈடுபடும். அதற்கடுத்த பிப்ரவரி முதல் மார்ச் இறுதி வரை பிரசவ காலமாகும். அப்போது வரையாடுகள் எவ்வித இடையூறுகளும் இன்றி பிரசவிக்கும் வகையில் பூங்கா மூடப்பட்டு, ராஜமலைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்படும்.
இந்நிலையில் இங்கு வரையாடுகள் பிரசவிக்க துவங்கிய நிலையில் ராஜமலை, நாய் கொல்லிமலை ஆகிய பகுதிகளில் குட்டிகள் தென்பட்டன. அதனால் வரையாடுகளின் பிரசவத்திற்காக இரவிகுளம் தேசிய பூங்கா பிப். 1 முதல் மார்ச் 31 வரை மூடப்படுவதாக தலைமை வன உயிரின காப்பாளர் பிரமோத் ஜி.கிருஷ்ணன் தெரிவித்தார். இங்கு கடந்தாண்டு புதிதாக பிறந்த 144 குட்டிகள் உட்பட 827 வரையாடுகள் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

