ADDED : அக் 03, 2025 01:59 AM

சென்னை: இரிடியத்தில் முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என, பண மோசடியில் ஈடுபட்ட, 54 பேரின் வீடுகளில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.
' இரிடியம்' என்ற தனி உலோகம் மிகவும் அரிதானது. இதில், 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 1 கோடி ரூபாய் தரப்படும் என, தமிழகம் முழுதும், 1,000 கோடி ரூபாய் வரை மோசடி நடந்து உள்ளது.
இதற்காக மோசடி கும்பல்கள், ரிசர்வ் வங்கி பெயரை பயன் படுத்தி, போலி ஆவணங்கள் வாயிலாக அறக்கட்டளைகளை துவங்கி உள்ளனர்.
இந்த அறக்கட்டளைகள் வாயிலாக பணப்பரிமாற்றம் செய்தால், அரசுக்கு வரி செலுத்த வேண்டி யது இல்லை என்பதால், அதன் வாயிலாக மோசடி நடந்துள்ளது.
இதுகுறித்து, ரிசர்வ் வங்கி அதிகாரிகள், தமிழக சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். விசாரணை யில், 1,000 கோடி ரூபாய் வரை மோசடி நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த சாமிநாதன் உட்பட, 54 பேரை கைது செய்துள்ளனர். இவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.
அவற்றை ஆய்வு செய்தபோது, சென்னை சாமிநாதன், புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை ரவிச்சந்திரன், வேலுார் மாவட்டம் காட்பாடி ஜெயராஜ், திருச்சி மாவட்டம் மணப்பாறை ஞானபிரகாசம், திண்டுக்கல் டெய்சி ராணி ஆகியோர், மோசடிக்கு மூளையாக செயல் பட்டது தெரியவந்தது.