தூய்மைப் பணியாளர்களுக்கான திட்டத்தில் முறைகேடு: சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு
தூய்மைப் பணியாளர்களுக்கான திட்டத்தில் முறைகேடு: சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு
ADDED : மே 14, 2025 04:21 PM

சென்னை: தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு எதிராக யூடியூபர் சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
தூய்மைப் பணியாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அவர்களை தொழில் முனைவோர்களாக்கும் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் சவுக்கு சங்கர் வழக்கு தொடர்ந்தார்.
அவர், இந்தத் திட்டத்தில் நடந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இது தொடர்பாக சென்னை ஐகோட்டில் அவர் தாக்கல் செய்த மனுவில், 'இந்த திட்டத்தை அமல்படுத்தும் பணிகள் சட்டவிரோதமாக தனியார் அமைப்புக்கு வழங்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை முக்கிய பங்கு வகித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ.,க்கு உத்தரவிட வேண்டும்' எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று (மே 14) நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
மேலும், இந்த வழக்கில் சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரிய தலைவரையும் சேர்க்க வேண்டும். நகராட்சி அலுவலகம், குடிநீர் வழங்கல் செயலர், சிறு, குறு நடுத்தர தொழில் செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.