தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ரேஷன் மின்னணு எடை தராசு விற்பனை கருவி இணைப்பில் முறைகேடு

 ரேஷன் மின்னணு எடை தராசு விற்பனை கருவி இணைப்பில் முறைகேடு

 ரேஷன் மின்னணு எடை தராசு விற்பனை கருவி இணைப்பில் முறைகேடு


ADDED : மே 22, 2026 07:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2026 07:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ரேஷன் கடைகளில், மின்னணு எடை தராசு மற்றும் விற்பனை முனைய கருவியை, 'புளூ டூத்' வாயிலாக இணைப்பதில் சில ஊழியர்கள் முறைகேடு செய்து, கள்ளச்சந்தையில் பொருட்களை விற்பனை செய்வதாக புகார் எழுந்து உள்ளது.

ரேஷன் கடை ஊழியர்கள், விற்பனை முனைய கருவியில் பொருட்களுக்கான 'பில்' பதிவு செய்கின்றனர். பல கார்டுதாரர்கள் அரிசி வாங்குவதில்லை.

ஆனால் சில ஊழியர்கள், அனைத்து பொருட்களையும் கருவியில் பதிவு செய்து, வாங்காத பொருட்களை தாங்களே எடுத்து, வியாபாரிகளிடம் விற்கின்றனர். பொருட்களை எடை குறைத்து வழங்குவதாகவும் புகார்கள் எழுந்தன .

எனவே, எடை தராசு, விற்பனை கருவி ஆகியவற்றை இணைத்து, அதன் வாயிலாக எடை போட்டு பொருட்களை வழங்க, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, தமிழக ரேஷன் கடைகளில் எடை தராசு, விற்பனை முனைய கருவி ஆகியவை, 'புளூ டூத்' அல்லது 'ஆப்டிகல் கேபிள்' வாயிலாக இணைக்கப்பட்டுள்ளன.

இதன் வாயிலாக, ஒவ் வொரு பொருளையும் தனித் தனியே எடை தராசில் வைத்து தான், விற்பனை முனைய கருவியில் பதிவு செய்து, வழங்க வேண்டும் .

இதனால், கார்டுதாரர்கள் வாங்காத பொருட்களை பதிவு செய்ய முடியாது. ஆனால், இந்த முறையிலும் சிலர் முறைகேடு செய்கின்றனர்.

அதாவது, 5 கிலோ, 10 கிலோ அரிசி மூட்டையை தயாராக வைத்து கொண்டு, கார்டுதாரர் வாங்காதபோது, அந்த மூட்டையை எடையில் வைத்து பதிவு செய்கின்றனர்.

இந்நிலையில் சிலர், எடை தராசு மற்றும் விற்பனை முனைய கருவியை, 'புளூ டூத்' வாயிலாக இணைக்கும் தொழில்நுட்பத்தை முடக்கி, பொருட்களை தனித்தனியாக பதிவு செய்து, அதற்கு ஏற்ப எடை போட்டு வழங்காமல், மொத்தமாக 'பில்' போட்டு முறைகேடு செய்கின்றனர்.

இதுகுறித்து, உணவு வழங்கல் துறை உதவி ஆணையர் ஒருவர் கூறியதாவது:

சில கடைகளில், முறைகேடான மொபைல் போன் செயலிகள் மற்றும் அதை உருவாக்கிய நபர்கள் வாயிலாக, புளூ டூத் வாயிலாக இணைக்கப்பட்டுள்ள எடை தராசு, விற்பனை முனைய கருவியை செயலிழக்க செய்து விடுகின்றனர்.

அதை பயன்படுத்தி, ஒரே சமயத்தில் அனைத்து பொருட்களையும் விற்பனை முனைய கருவியில் பதிவு செய்து விட்டு, கார்டுதாரர்கள் கேட்கும் பொருட்களை மட்டும் வழங்கி விட்டு, மீதியை கள்ளச்சந்தையில் விற்கின்றனர்.

எனவே, புளூ டூத் வாயிலாக இணைப்பதற்கு தடை விதிக்க வேண்டும். கேபிள் வாயிலாக இணைப்பதுடன், ஒவ்வொரு மின்னணு தராசுக்கும் தனி பதிவெண் உண்டு.

அந்த எண், கருவியில் வந்தால் மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கும் வகையில், தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும். அப்போது தான், இந்த முறைகேட்டை தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us