வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட பாசன நீர் நிறுத்தம்
வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட பாசன நீர் நிறுத்தம்
ADDED : நவ 01, 2024 04:18 AM

ஆண்டிபட்டி : திண்டுக்கல், மதுரை மாவட்டங்களின் பாசனத்திற்காக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வைகை அணையில் இருந்து கால்வாய் வழியாக திறக்கப்பட்ட நீர் நேற்று காலை 6:00 மணிக்கு நிறுத்தப்பட்டது.
பெரியாறு பாசனப்பகுதி, திருமங்கலம் கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசன நிலங்கள், பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன நிலங்களின் முதல் போகத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் சில மாதங்களாக வெளியேறுகிறது. தண்ணீரின் தேவையை பொருத்து திறக்கப்படும் நீரின் அளவில் அவ்வப்போது மாற்றம் செய்யப்படுகிறது.
அக்.,16ல் வினாடிக்கு 800 கன அடியாக இருந்த நீர் வெளியேற்றம் அக்.,22ல் வினாடிக்கு 900 கன அடியாக அதிகரிக்கப்பட்டு, மீண்டும் அக்.,25ல் வினாடிக்கு 700 கன அடியாகவும், மறுநாள் வினாடிக்கு 500 கன அடியாகவும் குறைக்கப்பட்டது.
இந்நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்காக வெளியேற்றப்பட்ட தண்ணீர் நேற்று காலை 6:00 மணிக்கு நிறுத்தப்பட்டது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி, சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம் போல் வெளியேற்றப்படுகிறது.
நேற்று அணையின் நீர்மட்டம் 59.91 அடி (அணை உயரம் 71:00 அடி.) அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 636 கன அடியாக இருந்தது. அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வதில் தாமதமாகிறது.