வேலையை உதறிவிட்டு த.வெ.க.,வில் சேர்ந்த ஐ.ஆர்.எஸ்., அதிகாரிக்கு கொ.ப.செ., பதவி
வேலையை உதறிவிட்டு த.வெ.க.,வில் சேர்ந்த ஐ.ஆர்.எஸ்., அதிகாரிக்கு கொ.ப.செ., பதவி
ADDED : ஜூன் 10, 2025 02:14 AM

சென்னை: ஐ.ஆர்.எஸ்., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க.,வில் இணைந்த அதிகாரிக்கு, கொள்கை பரப்பு செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வும், தற்போதைய பா.ஜ., நிர்வாகியுமான ராஜலட்சுமி, தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., டேவிட் செல்வன், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ஸ்ரீதரன், ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தலைவர் மரிய வில்சன், முன்னாள் நீதிபதி சுபாஷ் ஆகியோர் நேற்று த.வெ.க.,வில் இணைந்தனர்.
வருமான வரித் துறையில் பணியாற்றி, சமீபத்தில் விருப்ப ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ்., அதிகாரி அருண்ராஜ் என்பவரும் த.வெ.க.,வில் நேற்று இணைந்தார். அவருக்கு கொள்கை பரப்பு பொதுச்செயலர் பதவியை, அக்கட்சி தலைவர் விஜய் வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை:
கொள்கை பரப்பு பொதுச்செயலர் பொறுப்பில் அருண்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
என் உத்தரவு மற்றும் ஆலோசனைப்படி, கட்சி பொதுச்செயலர் ஆனந்த் வழிகாட்டுதலில், கட்சி கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல்திட்ட பணிகளை அவர் மேற்கொள்வார்.
கட்சி நிர்வாகிகள், அவருக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, வரும் சட்டசபை தேர்தலுக்கான கட்டமைப்பு மற்றும் தேர்தல் முன்னெடுப்புகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கட்சியில் இணைந்த மற்றவர்களுக்கு, பதவி எதுவும் வழங்கப்படவில்லை.
சென்னை பனையூரில் உள்ள த.வெ.க., அலுவலகத்திற்கு வந்த அவர்கள் கட்சியில் சேர்ந்த பின், விஜயுடன் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக சில நிமிடங்கள் கலந்துரையாடி, நடிகர் விஜயை நேரில் சந்தித்து போட்டோ எடுத்துக் கொண்டனர்.

