தினகரன், அன்புமணியுடன் அண்ணாமலை சந்திப்பு: பின்னணியில் அமித் ஷா?
தினகரன், அன்புமணியுடன் அண்ணாமலை சந்திப்பு: பின்னணியில் அமித் ஷா?
UPDATED : நவ 27, 2025 02:42 AM
ADDED : நவ 27, 2025 01:31 AM

சென்னை: அன்புமணி மற்றும் தினகரனை சமாதானப்படுத்தும் பணியில், மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தலின்படி, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை ஈடுபட்டிருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தினகரனை சேர்க்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், அவரை தினகரன் விமர்சித்து வருகிறார்.
பா.ம.க.,வில், அன்புமணி மற்றும் ராமதாஸ் மோதல் காரணமாக, அக்கட்சி ஓட்டுகள் பிரியும் நிலை உள்ளது.
இவை, தி.மு.க.,வுக்கு எதிராக, பலமான கூட்டணி அமைக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் திட்டத்தில், பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, தங்கள் கூட்டணிக்கு த.வெ.க., வரும் என்ற பழனிசாமியின் ஆசையும் நிறைவேறவில்லை.
அதே நேரத்தில், அ.தி.மு.க.,வில் இருந்து வெளியேற்றப்பட்ட செங்கோட்டையன், த.வெ.க.,வில் இணைகிறார். இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியை பலப்படுத்துவதற்கான பணிகளில், அமித் ஷா தீவிரம் காட்ட துவங்கி உள்ளார்.
இதனால் தான், தினகரன், அன்புமணி ஆகியோருடன் நல்ல நட்பில் இருக்கும், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, அவர்களை சமாதானப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
கரூரில் சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் அ.ம.மு.க., பொதுச்செலயர் தினகரனையும், சென்னையில் கடந்த, 25ம் தேதி நடந்த தனியார் நிகழ்ச்சியில் பா.ம.க., தலைவர் அன்புமணியையும், அண்ணாமலை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புகள் பரஸ்பர சந்திப்பு என்றாலும், பின்னணியில் அமித் ஷா இருக்கிறார்.
அதன்படி, 'பழனிசாமிக்கு எதிராக கருத்து தெரிவிக்க வேண்டாம்; அவருடன், மேலிடத் தலைவர்கள் பேசி தங்களை விரைவாக கூட்டணியில் சேர்ப்பர்' என்று தினகரனிடம் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுபோல, 'ஒருங்கிணைந்த பா.ம.க.,வை தொண்டர்கள் விரும்புகின்றனர். தந்தையுடன் இணைந்து செயல்படவும்' என, அன்புமணியிடம் அண்ணாமலை கூறியுள்ளார்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

