ஐ.ஏ.எஸ்., அதிகாரி நீதிமன்றத்தைவிட மேலானவரா? மாநகராட்சி கமிஷனருக்கு குட்டு
ஐ.ஏ.எஸ்., அதிகாரி நீதிமன்றத்தைவிட மேலானவரா? மாநகராட்சி கமிஷனருக்கு குட்டு
ADDED : ஜூலை 10, 2025 05:17 AM

சென்னை,: 'ஐ.ஏ.எஸ்., அதிகாரி என்றால், நீதிமன்றத்தைவிட மேலானவர் என நினைக்கிறாரா; நீதிமன்றம் தன் அதிகாரத்தை காட்டினால் என்னவாகும்' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 5வது மண்டலமான ராயபுரத்தில், அங்கீகரிக்கப்படாத, சட்டவிரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, 2021 டிசம்பரில், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உரிய நடவடிக்கை எடுக்காததால், மாநகராட்சி கமிஷனருக்கு எதிராக, சென்னையை சேர்ந்த வழக்கறிஞரும், முன்னாள் கவுன்சிலருமான ருக்மாங்கதன், நீதிமன்ற அவ மதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி சுந்தர்மோகன் அடங்கிய அமர்வு, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால், சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும், அந்த தொகையை அவரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யவும், நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இந்நிலையில், மாநகராட்சி கமிஷனருக்கு அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க கோரி நேற்று காலை, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி சுந்தர்மோகன் அடங்கிய அமர்வில், தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி முறையீடு செய்தார்.
மேலும், இந்த விவகாரத்தில் எங்கள் தரப்பில்தான் தவறு இருப்பதாகவும் அவர் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, 'வழக்கறிஞர்கள் தவறான பிரமாண பத்திரத்தை கொடுத்திருந்தாலும், அதை மாநகராட்சி கமிஷனர் படித்து பார்த்து கையெழுத்து போட்டிருக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், அவர் கமிஷனராக இருக்கவே தகுதியில்லாதவர்.
'ஐ.ஏ.எஸ்., அதிகாரி என்றால் நீதிமன்றத்தைவிட மேலானவர் என நினைக்கிறாரா? நீதிமன்றத்தின் அதிகாரத்தை, நாங்கள் காட்டினால் என்னவாகும். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், கமிஷனர் ஏன் ஆஜராகவில்லை' என, கேள்வி எழுப்பினார்.
மேலும், 'உரிய பிரமாண பத்திரத்துடன் இன்று நேரில் ஆஜராக வேண்டும்' என, மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட்டார்.
அபராதம் குறித்து பின் முடிவு செய்து கொள்ளலாம் என கூறி, விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தார்.