கோதையாறு மின்வாரிய பங்களாவில் அசோக்குமார் பதுங்கலா?
கோதையாறு மின்வாரிய பங்களாவில் அசோக்குமார் பதுங்கலா?
ADDED : நவ 03, 2024 02:23 AM

திருநெல்வேலி:அமலாக்கத்துறை தேடும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் மாஞ்சோலை எஸ்டேட் அருகே கோதையார் மின்வாரிய கெஸ்ட் ஹவுஸில் பதுங்கியுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அத்தகவலை போலீசார் மறுத்துள்ளனர்.
தமிழக மின்துறை அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள செந்தில்பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளில், அவருடைய தம்பி அசோக்குமார் உள்ளிட்டவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. பல சம்மன்கள் அனுப்பியும் அசோக்குமார் ஆஜராகாமல், தொடர்ந்து ஓராண்டுக்கும் மேலாக தலைமறைவாக உள்ளார்.
இந்நிலையில், அசோக்குமார் திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை மணிமுத்தாறு அணை மேலே மாஞ்சோலை எஸ்டேட் அருகே கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் உள்ள கோதையாறு அணை மின் திட்ட கெஸ்ட் ஹவுஸில் தங்கி உள்ளதாக தகவல் வெளியானது.
தீபாவளிக்கு முன்னரே அங்கு வந்த அசோக்குமார் நேற்று கோதையாறு அணையின் 2 மின் திட்டங்களையும் பார்வையிட்டுள்ளதாகவும், தமிழக மின் வாரிய கெஸ்ட் ஹவுஸ்களில் தங்கி இருப்பது பாதுகாப்பானதாக இருக்கும் என அசோக்குமார் கருதியே, அங்கு வந்து தங்கி இருப்பதாகவும் தி.மு.க., வட்டாரங்களிலும் பரபரப்பாக பேசினர்.
இது குறித்து திருநெல்வேலி மாவட்ட போலீசாரிடம் விசாரித்தபோது, ''அப்படியொரு தகவல் வெளியானதும், சம்பந்தப்பட்ட கெஸ்ட் ஹவுஸ்களில் அசோக் குமார் தங்கி இருக்கிறாரா என ரகசியமாக விசாரித்தோம். அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், அங்கு வரவில்லை என்பது தெரியவந்தது. இதை உளவுத்துறை போலீசார் வாயிலாக தலைமையகத்துக்கும் தகவல் தெரிவித்து விட்டோம்,'' என்றனர்.