ஹிந்துத்துவ அரசியலுக்கு தி.மு.க., பாதை அமைக்கிறதா? * சீமான் கேள்வி
ஹிந்துத்துவ அரசியலுக்கு தி.மு.க., பாதை அமைக்கிறதா? * சீமான் கேள்வி
ADDED : பிப் 11, 2025 07:34 PM
சென்னை:'ஹிந்துத்துவ அரசியலுக்கு தி.மு.க., அரசு பாதை அமைக்கிறதா' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து, சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோவில், சிக்கந்தர் பாதுஷா தர்கா, பல ஆண்டுகளாக இருக்கின்றன. ஹிந்து, முஸ்லிம் என இரண்டு சமதாயத்தினரும் எவ்வித பிரச்னையின்றி, அவரவர் நம்பிக்கைகளின்படி வழிபாடு செய்து வருகின்றனர். தற்போது, அதை சிக்கலாக மாற்றி பூதாகரப்படுத்தியது யார்?
துவக்க நிலையிலேயே, இரு தரப்பையும் அழைத்து, ஒருமித்த முடிவுக்கு கொண்டு வந்து தீர்வு பெற்று தராமல், பிரச்னையை பெரிதாக்க, தி.மு.க., அரசு துணை போனதேன்?
சிக்கந்தர் தர்காவுக்கு ஆடு, கோழிகளை நேர்ந்து விடுவதும், இறைச்சியை சமைத்து உண்ணுதலும் நடந்து வரும் நிலையில், திடீரென காவல் துறை அனுமதி மறுத்து வருகிறது.
திருப்பரங்குன்ற மலை விவகாரத்தை சிக்கலாக்க, பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் முயற்சித்து வரும் நிலையில், அவர்களை வலிமைப்படுத்துவதுபோல், அறநிலையத் துறை நடந்து கொள்கிறது.
யார் சொல்லி அமைச்சர் சேகர்பாபு இப்படி செய்கிறார்; முதல்வர் என்ன செய்கிறார். ஹிந்துத்துவா அரசியலுக்கு, தி.மு.க., பாதை அமைக்கிறதா; இந்த விவகாரத்தில், தி.மு.க., அரசு திட்டமிட்டு, மதப்பூசலை உருவாக்க நினைக்கிறதா?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

