அவங்களுக்கு தானா; எங்களுக்கு இல்லையா? 'தாட்கோ'வுக்கு எதிராக குமுறும் இளைஞர்கள்
அவங்களுக்கு தானா; எங்களுக்கு இல்லையா? 'தாட்கோ'வுக்கு எதிராக குமுறும் இளைஞர்கள்
ADDED : ஜூன் 09, 2025 01:53 AM
சென்னை: 'தாட்கோ வழங்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்து, கிராமப்புற இளைஞர்களிடம் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில்லை' என்ற, புகார் கூறப்படுகிறது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகமான, 'தாட்கோ' நிறுவனம் சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகுவோர் பயன் பெறும் வகையில், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இப்பயிற்சிகளை, எஸ்.சி., - எஸ்.டி., இளைஞர்கள் கட்டணமின்றி இலவசமாக பெற முடியும். திறன் மேம்பாட்டு பயிற்சி திட்ட அறிவிப்புகளை, தாட்கோ நிர்வாகம் இணையதளத்தில் வெளியிடும். நகர்ப்புறங்களில் வாழும் மாணவர்கள், இளைஞர்கள் விண்ணப்பித்து பயன் பெறுகின்றனர்.
ஆனால், கிராமப்புறங்களை சேர்ந்த எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு, இந்த தகவல்கள் போய் சேருவதில்லை. அதற்கு காரணம், அங்குள்ள தாட்கோ அதிகாரிகள் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாததே என புகார் கூறப்படுகிறது.
அதனால், தாட்கோ அறிவிக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளில், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் மட்டுமே அதிகளவில் சேர்ந்து பயன் பெறுகின்றனர். மற்றவர்கள் பலனடைவதில்லை.
எனவே, இப்பிரச்னையில், தாட்கோ இயக்குநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, கிராமப்புற இளைஞர்களிடம் எழுந்துள்ளது.
இதுகுறித்து, கிராமப்புற மாணவர்கள் சிலர் கூறியதாவது:
சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருப்பவர்கள், நேரடியாக தலைமை அலுவலகத்துக்கு சென்று விசாரித்து சேர்ந்து விடுகின்றனர்; எங்களால் சேர முடியவில்லை. பள்ளி, கல்லுாரிகளுக்கு அறிவிப்பு கிடைத்தால் தான், எங்களுக்கு சொல்லப்படுகிறது.
மாவட்டங்களில் இருக்கும் தாட்கோ அதிகாரிகள், இந்த தகவல்களை எங்களுக்கு தெரியப்படுத்த, எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. தாட்கோ இயக்குநர் தலைமையில் தான், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
நகரத்தில் வசிக்கும் மாணவர்கள் மட்டும் பயன் பெறும் வகையில், இந்த திட்டம் இருப்பது ஏற்புடையதாக இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.