ADDED : டிச 04, 2024 12:35 AM
திருநெல்வேலி:திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயில் நிலத்தில் தனியார் ஓட்டல் கட்ட புதிய நிபந்தனைகளை விதித்து உள்ளூர் திட்ட குழும இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி மேலப்பாளையம் குலவணிகர்புரம் பகுதியில் குறிச்சி சொக்கநாதர் கோயிலுக்கு சொந்தமான 2864 சதுர மீட்டர் நிலம் உள்ளது.
இதில் 1101 சதுர மீட்டர் பரப்பளவில் புதிதாக தனியார் ஓட்டல் கட்ட அனுமதி கோரினர். நிலம் ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானதால் நெல்லையப்பர் கோயில் செயல் அலுவலர் 2023 அக்டோபரில் உள்ளூர் திட்ட குழுமத்திற்கு அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார். அந்த இடத்தில் நீர்வழிப்பாதை உள்ளது. அங்கு 50 அடி திட்டச்சாலை அமைக்கும் திட்டமும் உள்ளது.
எனவே இவற்றை மறைத்து கோயில் செயல் அலுவலர் விண்ணப்பித்துள்ளதாக பிரம்மநாயகம் என்பவர் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பி இருந்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய ஹிந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி அளித்துள்ள பதிலில்,''ஓட்டல் கட்ட விண்ணப்பித்துள்ள இடத்தில் நீர்வழிப்பாதையில் பாலம் அமைத்த பிறகும், 50 அடி திட்ட சாலைக்கான இடத்தினை நிலை நிறுத்தி பின்னேற்பு ஒப்புதல் பெறப்பட்ட பின்பு தான் அங்கு கட்டுமான பணிகள் தொடர வேண்டும் என உள்ளூர் திட்ட குழும இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
எனவே தற்போது அங்கு கட்டுமான பணிகள் எதுவும் நடக்கவில்லை,'' என, தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நெல்லையப்பர் கோயில் நிலத்தில் உள்ள நீர்வழிப்பாதை, திட்ட சாலைகளை செயல்படுத்திய பிறகு அங்கு ஓட்டல் கட்ட அனுமதிக்கப்படும் என புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.