தமிழகத்தை மீண்டும் புயல் தாக்க வாய்ப்பா? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்
தமிழகத்தை மீண்டும் புயல் தாக்க வாய்ப்பா? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்
ADDED : டிச 06, 2024 10:30 AM

சென்னை: 'வங்கக்கடலில் மேலும் இரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது' என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதனால், புதுச்சேரி மற்றும் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. குடியிருப்புகளுக்கு மழை நீர் புகுந்ததால், மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
தற்போது, பெஞ்சல் புயல் பாதிப்பில் இருந்து மக்கள் மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில், ஆங்காங்கே தற்போதும் மழை பெய்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில், தெற்கு வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
'நாளை (டிச.,07) மத்திய வங்கக்கடலிலும், டிச., 2வது வாரத்தில் தென் கிழக்கு வங்கக்கடலிலும் உருவாக வாய்ப்புள்ளதாக, கணினி மாதிரிகளின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த இரு காற்றழுத்த தாழ்வு பகுதிகளும் புயலாக வலுப்பெறும் வாய்ப்பு தற்போதைய வானிலை நிலவரப்படி இல்லை' என வானிலை மையம் தெரிவித்து உள்ளது.