ரகுபதி சட்டத்துறை அமைச்சரா, பேட்டை ரவுடியா? தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி
ரகுபதி சட்டத்துறை அமைச்சரா, பேட்டை ரவுடியா? தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி
ADDED : டிச 21, 2024 07:33 PM
கோவை:''தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பேட்டை ரவுடி போல் பேசியிருக்கிறார்; அவர், அமைச்சரா; ரவுடியா?'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
கோவையில், அவர் அளித்த பேட்டி:
ஜாபர் சாதிக் வழக்கில் இருந்து மூத்த நீதிபதி விலகியிருக்கிறார். அவருக்கு, வெளியே இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதா என சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. இவ்வழக்கில் மர்ம முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழும்போது, பல்வேறு தகவல்கள் வெளி வருகின்றன.
சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு, தமிழ்நாடு பாடநுால் கழகத்துக்கு புத்தகம் சப்ளை செய்யும் நிறுவனத்துடன் வர்த்தக தொடர்பு உள்ளது. ஜாமின் வழக்கில் இருந்து விலகியுள்ள நீதிபதி, காரணத்தை பதிவு செய்யவில்லை.
ஆளுங்கட்சி சம்மந்தப்பட்ட நபர் என்பதால், அது தொடர்பாக விளக்கம் தேவை. தவறான முறையில் கோர்ட்டுகளில் மனு தாக்கல் செய்திருப்பதாக, நீதிபதிகள் கேள்வி கேட்டுள்ளனர்.
சபாநாயகருக்கு நடுநிலை
சபாநாயகர் அப்பாவு கண்ணாடியை பார்த்துக் கொள்ள வேண்டும். தொண்டர்களை காட்டிலும் சபாநாயகர் அப்பாவு கட்சிக்காக கூடுதல் வேலை செய்கிறார். சட்டசபையில் வேல்முருகன் கேள்வி கேட்கிறார்; அவர் மீது சபாநாயகர் தாவுகிறார். அதேபோல், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் மீதும் பாய்கிறார். அப்பாவு நடுநிலை தவறி நடக்கிறார்.
தமிழகத்தில், ஆறு பல்கலைகளில் துணைவேந்தர்கள் இல்லை. உச்ச நீதிமன்றம் மற்றும் பல்கலை மானியக்குழு நடைமுறையின் கீழ் செயல்பட வேண்டும். தமிழக அரசு தன்னிச்சையாக செயல்பட அதிகாரம் வழங்கப்படவில்லை.
கல்வியில் அரசியல்
கல்வியில் தி.மு.க.,வினர் அரசியல் செய்வதால், கவர்னர் தனது கருத்தை சொல்கிறார். அமைச்சர் கோவி.செழியன் அரசியல் செய்வதால், கவர்னர் நுழைகிறார். தமிழக கவர்னர் வந்தபிறகே, துணைவேந்தர் நியமனம் நியாயமாகவும் வெளிப்படையாகவும் நடக்கிறது.
கடந்த 2012ல் காங்., - தி.மு.க.,வை எதிர்த்து, பார்லிமென்டில் சண்டை போட்டவர் திருமாவளவன். என்.சி.ஆர்.டி., பாடப்புத்தகத்தில் ஒரு கார்ட்டூன் இருந்தது.
சவுக்கால் அம்பேத்கரை நேரு அடிப்பது போல் அதில் இருந்தது. அம்பேத்கர் அரசியல் அமைப்பு சட்டத்தை, மெதுவாக நகர்த்தியதால், சாட்டையை நேரு சுழற்றியதாக, என்.சி.ஆர்.டி., பாடப்புத்தகத்தில் இருந்தது.
அதை நீக்கியது பா.ஜ., அரசு. அன்றைக்கு காங்., - தி.மு.க.,வை எதிர்த்து போராடியவர் திருமாவளவன். அரசியலுக்காக வேண்டுமென்றே பேசுகிறார் அவர்.
பேட்டை ரவுடியா?
ரகுபதி சட்டத்துறை அமைச்சரா, தி.மு.க., பேட்டை ரவுடியா என்ற சந்தேகம் வருகிறது. காவல் துறை பயிற்சி மையத்தில் ரவுடிகள் 'பரேடு' நடத்தும்போது, ரவுடிகள் எப்படி பேசுவரோ, அப்படித்தான் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகிறார்.
இவ்வாறு, அண்ணாமலை கூறினார்.