கொத்தடிமைத்தனம் திராவிட மாடலா? அ.தி.மு.க., ஜெயராமன் கேள்வி
கொத்தடிமைத்தனம் திராவிட மாடலா? அ.தி.மு.க., ஜெயராமன் கேள்வி
ADDED : ஜூன் 30, 2025 02:28 AM

திருப்பூர்: ''அனைவரும் கொத்தடிமையாக இருக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடலா,” என, அ.தி.மு.க, தேர்தல் பிரிவு செயலர் பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி எழுப்பினார்.
அவர் கூறியதாவது:
தகுதி படைத்த குடும்ப பெண்களுக்கு மட்டும் 1,000 ரூபாய் உரிமைத்தொகை என்ற தி.மு.க., அரசு, தேர்தல் வருவதால், தகுதி அளவீட்டை மாற்றுகிறது. அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தது போல், 'எல்லோருக்கும் எல்லாமும்' என்ற வகையில் அரசு திட்டம் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சிலருக்கு வழங்குவதும், பிறகு திருத்தம் செய்வதும் சந்தர்ப்பவாதம். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி துவக்கும், 'தமிழகத்தை காப்போம்; தமிழக மக்களை மீட்போம்' பயணம், அ.தி.மு.க.,வை ஆட்சியில் அமர்த்தும் வெற்றிப் பயணமாக அமையும்.
தி.மு.க., ஆட்சியில், ஒரு குடும்பம் மட்டுமே பயனடைய நினைக்கின்றனர். கட்சியின் சீனியர் நிர்வாகிகளை கூட, வீட்டில் முடக்கும் அளவுக்கு கொத்தடிமையாக வைத்துள்ளனர்.
மூத்த நிர்வாகி துரைமுருகனை ஓரங் கட்டியதால், தி.மு.க.,வில் வேதனை பரவியுள்ளது. அனைவரும் கொத்தடிமையாக இருக்க வேண்டுமா; இதுதான் திராவிட மாடலா என்று கேள்வி எழுந்துள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.