ADDED : அக் 18, 2024 10:11 PM
சென்னை:முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை:
ஜெயலலிதா மறைவிற்குப் பின், துரோகம் உள்ளே நுழைந்ததன் விளைவாக, கட்சிக்குள் அதர்மங்கள் அதிகரித்து துரோகச் செயல்கள் தாண்டவமாடி, கட்சி அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. அனைவருக்குமான கட்சி அ.தி.மு.க., என்ற நிலை துரோகக் கூட்டத்தால் குழிதோண்டி புதைக்கப்பட்டதன் காரணமாக, லோக்சபாவில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த அ.தி.மு.க., இன்று வெற்றிடமாக காட்சியளிக்கிறது.
ஏழு லோக்சபா தொகுதிகளில் டிபாசிட் இழந்து, அ.தி.மு.க., படுதோல்வியை சந்தித்தது. இதன் வாயிலாக, முதல்வர் பதவிக்கு பரிந்துரைத்தவர், முதல்வர் பதவியில் அமர்த்தியவர், முதல்வர் பதவியில் தொடர துணை புரிந்தவர்கள் என, அனைவரையும் முதுகில் குத்திய துரோகியை, மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பது தெளிவாகி விட்டது.
இந்தத் துரோகச் செயல் காரணமாக, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், 45 சதவீதமாக இருந்த அ.தி.மு.க.,வின் ஓட்டு வங்கி, இன்று 20 சதவீதமாக குறைந்து விட்டது. இப்படிப்பட்ட துரோகத்தின் மொத்த உருவம், இன்று தியாகத்தைப் பற்றி பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.
இந்த நிலைமை நீடித்தால், அ.தி.மு.க., ஓட்டு சதவீதம் குறைந்து கொண்டே செல்லும். வெற்றிக்கனி என்பது எட்டாக் கனியாகி விடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.