தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஸ்டாலினுக்கு தன்னம்பிக்கை அதிகமா; பழனிசாமிக்கு அதிகமா?: அந்துமணி பதில்கள்

ஸ்டாலினுக்கு தன்னம்பிக்கை அதிகமா; பழனிசாமிக்கு அதிகமா?: அந்துமணி பதில்கள்

ஸ்டாலினுக்கு தன்னம்பிக்கை அதிகமா; பழனிசாமிக்கு அதிகமா?: அந்துமணி பதில்கள்

3


ADDED : நவ 20, 2026 04:40 AM

Follow on GoogleFavourite on Google

3

ADDED : நவ 20, 2026 04:40 AM


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வி.சுமன், நாகப்பட்டினம்:

'காங்கிரஸ் ஆதரவு இல்லாமல், தி.மு.க., என்றுமே ஆட்சி அமைத்தது கிடையாது...' என்கிறாரே மாணிக்கம் தாகூர்?



முதலில் தமிழகத்தில் காங்கிரஸ் இருக்கிறதா, இல்லையா என்பதை அக்கட்சியின் தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் சரிபார்க்க வேண்டும். தி.மு.க., - காங்கிரஸ், த.வெ.க., - காங்கிரஸ் என பிளவுபட்டு விட்டதே!

டி.ஜெயசிங், கோவை:

அ.தி.மு.க., பழனிசாமிக்கு தன்னம்பிக்கை அதிகமா; தி.மு.க., ஸ்டாலினுக்கு அதிகமா?



முதலாமவருக்கு குருட்டு நம்பிக்கை மிக அதிகமாகி, கட்சியின் மூத்த உறுப்பினர்களை கோட்டை விட்டு விட்டார்; இரண்டாமவருக்கு அதீத நம்பிக்கை காரணமாக, கட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலை ஏற்பட்டு விட்டது.

க.செவ்வந்தி, திண்டுக்கல்:

'நாங்கள் தொழிலாளர் வர்க்கத்திடம் தான் நிதியை பெறுகிறோம்; பெரு முதலாளிகளிடம் அல்ல...' என்கிறாரே, கம்யூ., கட்சியின் தமிழக செயலர் வீரபாண்டியன்?



ஆக மொத்தத்தில், தொழிலாளர்களுக்கு நன்மை செய்வதாகக் கூறி, அவர்களிடமிருந்தே கட்சி நிதி பெறுவதை ஒப்பு கொண்டுவிட்டார்!

க.ரேஷ்மா, திண்டிவனம்:

காவல் நிலையத்திற்கு செல்லாமல் வீட்டிலிருந்தே இணையவழியில் புகாரளிக்கும் வசதியை, டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் துவக்கி வைத்துள்ளாரே?



நல்ல துவக்கம் தான். ஆனால், அப்படியும் புகார் ரசீதை மட்டும் கொடுத்து விட்டு, முதல் தகவல் அறிக்கையான, எப்.ஐ.ஆரே போடாமல் அலைக்கழித்து விடப் போகின்றனர் போலீசார்... டி.ஜி.பி., எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

பி.சுப்பிரமணியன், கல்லிடைக்குறிச்சி:

தமிழகத்தில் புதிய, 'டாஸ்மாக்' கடைகள் திறப்பதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருப்பது குறித்து?



அப்படியே, 'ஏற்கனவே உள்ள கடைகளையும் படிப்படியாக மூட வேண்டும்' என்றும் கூறி இருக்கலாம். ஆனால், அப்படி செய்தால் தமிழகத்தில் கள்ளச்சாராயம், தேனாறு, பாலாறாக ஓடும்.

என்.கிருஷ்ணா, திருநெல்வேலி

தமிழகத்தில் வீடுகளின் மேற்கூரையில் சூரிய மின்சக்தி திட்டத்திற்கு, ஒரே மாதத்தில் 35 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதே?



தமிழக அரசு இத்திட்டத்தை, விண்ணப்பங்கள் பெறப்பட்ட அதே வேகத்தில் பரிசீலனை செய்து, ஆவன செய்ய வேண்டும். தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்.

ஆர்.வித்யா, சென்னை:

'தினமலர் நாளிதழில் வெளியாகும் செய்திக்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள், எங்களுக்கு செவி சாய்ப்பதில்லை...' என்று சென்னை அடையாறு, தி.மு.க., கவுன்சிலர் மோகன்குமார் குற்றஞ்சாட்டியுள்ளாரே?



முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்திலிருந்தே, 'தினமலர்' நாளிதழில் வெளியாகும் செய்தியை பார்த்து நடவடிக்கை எடுக்கப்படுவது நடந்து வருவது தானே! தி.மு.க., கவுன்சிலருக்கு இது புதிதாக இருக்கும் போல் தெரிகிறது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us