சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு உண்மையா? அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு உண்மையா? அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
ADDED : மே 16, 2025 10:32 PM
சென்னை:துாய்மை பணியாளர்களை, தொழில் முனைவோராக்கும் திட்டத்தை அமல்படுத்தியதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், 'மனுதாரர் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை என தெரியவந்தால், அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்' என, எச்சரித்துள்ளது.
துாய்மை பணியாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில், அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கான, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை, தமிழக அரசு அறிவித்தது.
அதேபோல, துாய்மை பணியாளர்களுக்கு, 50 சதவீத மானியத்துடன், நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்திகள், உபகரணங்கள் வழங்கும் வகையில், மத்திய அரசால், 'நமஸ்தே' திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டங்களை செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டி, சி.பி.ஐ., விசாரணை நடத்த கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், 'யு டியூபர்' சவுக்கு சங்கர் வழக்கு தொடர்ந்தார்.
மனுவில், 'திட்டங்களை அமல்படுத்தும் பணிகள், சட்ட விரோதமாக, தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபை என்ற தனியார் அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளது.
'முறைகேட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வத்பெருந்தகை முக்கிய பங்கு வகித்துள்ளார். துாய்மை பணியாளர்களுக்கு அதிகாரம் வழங்க ஒதுக்கப்பட்ட பெருந்தொகை, உண்மையான பயனாளிகளுக்கு சென்று சேரவில்லை' என, கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் வாதாடியதாவது:
கடந்த 2023ல் துவக்கப்பட்ட இந்த திட்டம், சிறப்பான முறையில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. போதிய ஆவணங்களின்றி, அப்பட்டமான குற்றச்சாட்டை மனுதாரர் கூறியுள்ளார்.
இவ்விவகாரத்தில் நீதி மன்றத்தில் மறைக்க எதுவும் இல்லை. ஆவணங்களை தாக்கல் செய்வதில், எவ்வித தயக்கமும் இல்லை. அதிக எண்ணிக்கையில் ஆவணங்கள் உள்ளதால், அவற்றை வழங்க போதிய அவகாசம் வேண்டும்.
இவ்வாறு அவர்கள் வாதாடினர்.
இதை ஏற்ற நீதிபதிகள், சென்னை பெருநகர் குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம், வரும் 21ம் தேதி, இத்திட்டத்தை அமல்படுத்தியது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
விசாரணையின்போது, 'இத்திட்டத்தை செயல்படுத்துவதில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவன இயக்குநர்களில் ஒருவர், தமிழக காங்., தலைவரின் உறவினர் என்ற மனுதாரரின் குற்றச்சாட்டு உண்மையா?' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 'அது உண்மையாக இருந்தால், அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்' என்றும் எச்சரித்தனர்.