தொல்லியல் துறை ஆவணம் போலியா? போஸ்டர் ஒட்டி பொதுமக்கள் எதிர்ப்பு!
தொல்லியல் துறை ஆவணம் போலியா? போஸ்டர் ஒட்டி பொதுமக்கள் எதிர்ப்பு!
ADDED : மார் 17, 2024 06:53 AM

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் மேற்கு பகுதியில், புறம்போக்கு இடத்தில் வசித்த, 48 குடும்பத்தினருக்கு, கோவில் தோற்றத்தை மறைப்பதாக கூறி, தொல்லியல் துறை உரிய இழப்பீட்டு தொகையுடன், 1988ல் மாற்று இடம் வழங்கியது.
இதற்காக தொல்லியல் துறை, வரைப்படத்துடன் கூடிய ஒரு ஆணையை மாவட்ட நிர்வாகம் வாயிலாக வழங்கியது. ராஜராஜன் நகர் என்ற பெயரில், அங்கு 48 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
தற்போது, அரண்மனை தேவஸ்தானம் நிர்வாகம், அந்த இடம் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி, மாத வாடகை செலுத்த கூறி மிரட்டுவதாக அப்பகுதியினர் புகார் எழுப்பியுள்ளனர்.
இது குறித்து, தொல்லியல்துறை, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து மக்கள் மனு அளித்துள்ளனர்.
எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தொல்லியல்துறை, மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு வழங்கிய ஆவணம் போலியா எனவும், மீண்டும் பழைய இடத்திற்கு குடிபெயரும் போராட்டம் நடத்த உள்ளதாகவும் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
அரண்மனை தேவஸ்தானம் தரப்பில் கூறியதாவது:
நம்பி நாகம்மாள் என்பவருக்கு வழங்கப்பட்ட அந்த இடம், தேவஸ்தானத்துக்கு சொந்தமானது. அதன் அடிப்படையில் தான் வாடகை நிர்ணயம் செய்துள்ளோம். சிலர் வாடகை செலுத்துவதாக ஒப்புக் கொண்டனர். சிலர் இதை பிரச்னையாக மாற்றுகின்றனர்.
இவ்வாறு கூறப்பட்டது.
அப்பகுதியை சேர்ந்த இளங்கோவன் கூறியதாவது:
நாங்கள் வசிக்கும் இடம் மத்திய தொல்லியல் துறையால் வழங்கப்பட்டது. தொல்லியல்துறை, கலெக்டர் வழங்கிய ஆவணங்கள் செல்லாது என, தேவஸ்தானம் ஊழியர்கள் கூறுகின்றனர். இம்மாத இறுதியில் வீடுகளை இடித்து விடுவோம் என, மிரட்டி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

