வேந்தர் பதவியை பயன்படுத்தி பல்கலைகளை முடக்குவதா? கவர்னருக்கு அமைச்சர் கண்டனம்
வேந்தர் பதவியை பயன்படுத்தி பல்கலைகளை முடக்குவதா? கவர்னருக்கு அமைச்சர் கண்டனம்
ADDED : டிச 20, 2024 12:46 AM

சென்னை:'கவர்னர் ரவி சட்டத்தை தன் கையில் எடுத்து செயல்படும் போக்கை, அரசு கவனித்து கொண்டு தான் இருக்கிறது' என, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
'பல்கலை தேடுதல் குழுவில், பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., பிரதிநிதியையும் நியமிக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு கவர்னர் ரவி அறிவுறுத்தியதற்கு பதில் அளித்து, அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மாநில அரசு அமைக்கும் தேடுதல் குழு பரிந்துரைக்கும் மூன்று பேரில் ஒருவர், பல்கலை துணை வேந்தராக கவர்னரால் நியமிக்கப்படுவார்.
அதன்படி, பாரதியார் பல்கலை மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு, புதிய துணை வேந்தர்களை தேர்வு செய்ய தேடுதல் குழு அமைக்கப்பட்டது.
ஆனால், கவர்னர் தன்னிச்சையாக, யு.ஜி.சி., தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர் ஒருவரை, தேடுதல் குழுவில் நான்காவது நபராக நியமனம் செய்தார்.
தமிழக அரசு, சென்னை பல்கலை துணை வேந்தரை தேர்வு செய்ய, மூன்று பேர் அடங்கிய தேடுதல் குழு அமைத்தது. அதை ஏற்காமல், யு.ஜி.சி., தலைவர் பரிந்துரைக்கும் நபரை, தேடுதல் குழுவில் சேர்க்கும்படி முதல்வருக்கு கவர்னர் கடிதம் எழுதினார்.
துணை வேந்தரை தேர்வு செய்வதற்கு, தேடுதல் குழு அமைக்க அறிவிப்பு வெளியிடும்படி, அரசுக்கு கவர்னர் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும். தன்னிச்சையாக தேடுதல் குழு அமைக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை.
உயர் கல்வித்துறை கட்டுப்பாட்டில், 13 பல்கலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில், கோவை பாரதியார், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல், சென்னை அண்ணா, அண்ணாமலை, மதுரை காமராஜர் பல்கலைகளில் துணை வேந்தர் பணியிடம் காலியாக உள்ளது.
திருச்சி பாரதிதாசன், சேலம் பெரியார் பல்கலை துணை வேந்தர்களின் பதவி காலம் முடிந்த நிலையில், கவர்னர் ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கி உள்ளார். யு.ஜி.சி., தலைவர் பரிந்துரைக்கும் உறுப்பினரை சேர்த்து, பல்கலைகளுக்கு அமைக்கப்பட்ட தேடுதல் குழுவை மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் எழவில்லை.
மாநில தேவைகளுக்கு ஏற்ப, உயர் கல்வி அமைப்பை அமைத்துக்கொள்ள, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு அதிகாரமும், உரிமையும் உள்ளது.
வேந்தர் என்ற பதவி வழி பொறுப்பை பயன்படுத்தி, பல்கலை நடவடிக்கைகளை முடக்குவது, எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. கவர்னர் சட்டத்தை தவறாக தன் கையில் எடுத்து செயல்படும் போக்கை, அரசு கவனித்து கொண்டு தான் இருக்கிறது. கவர்னர் தன் செயல்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.