ADDED : நவ 23, 2024 07:32 PM
சென்னை:'தனியார் நிறுவன கட்டுப்பாட்டின் கீழ் மாற்றப்பட்ட வேட்டைத் தடுப்பு காவலர்களை, மீண்டும் வனத் துறைக்கு மாற்ற வேண்டும்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
வனத் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான வேட்டைத் தடுப்பு காவலர்களை, தனியார் நிறுவன ஒப்பந்தப் பணியாளர்களாக மாற்றியுள்ளது, தி.மு.க., அரசு. அதாவது, ஒப்பந்த பணி என்றாலும், அரசிடம் இருந்து ஊதியம் பெற்று வந்தனர். தற்போது, தனியார் நிறுவனத்திடம் ஊதியம் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர்.
இதன்வாயிலாக, வனத் துறைக்கும், வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்ற முடிவை, அரசு எடுத்துள்ளது. இதுபோன்ற தொழிலாளர் விரோத நடவடிக்கை, அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் அடிப்படைக் கோரிக்கைக்கு வேட்டு வைத்திருக்கிறது. இது இருக்கிற சலுகையை பறிக்கும் செயல்.
இதனால், அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் நேரடியாக ஒப்பந்த பணியாளர்களே இல்லை என்று சொல்லி, தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு விட்டதாக, தி.மு.க., அரசு விளம்பரப்படுத்திக் கொண்டாலும், ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
இதுதான் திராவிட மாடல் அரசு. அதாவது, பொது மக்களை ஏமாற்றுகிற அரசு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

