தாமிரபரணி - நம்பியாறு இணைப்பு திட்டம் பிப்ரவரி 5ல் அர்ப்பணிக்க அரசு இலக்கு?
தாமிரபரணி - நம்பியாறு இணைப்பு திட்டம் பிப்ரவரி 5ல் அர்ப்பணிக்க அரசு இலக்கு?
ADDED : ஜன 26, 2025 08:55 AM
சென்னை: தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டத்தை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பிப்ரவரி, 5ம் தேதி அர்ப்பணிக்க, அரசு இலக்கு நிர்ணயித்துஉள்ளது.
திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில், தாமிரபரணி - கருமேனியாறு -நம்பியாறு இணைப்பு திட்டம், 2009ல் துவக்கப்பட்டது. அப்போது, 369 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. சுற்றுச்சூழல் அனுமதி, நில எடுப்பு பணிகளால் திட்டம் இழுபறியானது.
இத்திட்டம் நிறைவேறினால், தாமிரபரணி ஆற்று வெள்ள உபரி நீரை, 13.7 டி.எம்.சி., அளவிற்கு கன்னடியன் கால்வாய் வழியாக, கருமேனியாறு, நம்பியாறுகளுக்கு எடுத்து செல்ல முடியும். தற்போது, 1,060 கோடி ரூபாய் திருத்திய திட்ட மதிப்பீட்டில் பணிகள், 98 சதவீதம் முடிந்துள்ளன.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த வெள்ளாங்குழி கிராமம் அருகே கன்னடியன் கால்வாயில் இருந்து, துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த எம்.எல்.தேரி வரை, வினாடிக்கு, 3,200 கனஅடி நீரை கொண்டு செல்ல வேண்டும்.
இதற்கு 75.2 கி.மீ., வெள்ள நீர் கால்வாய் அமைக்கப்பட வேண்டும். இதில், எம்.எல்.தேரி குளம் அருகே, 1.5 கி.மீ., துாரத்துக்கு நிலத்தை கையகப்படுத்துவதில், தாமதம் ஏற்பட்டு வருகிறது. தனிநபர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருப்பதும் காரணம். இவ்வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் பிப்ரவரி, 5 மற்றும் 6ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.
வழக்கில் சாதகமாக தீர்ப்பு கிடைக்கும்பட்சத்தில். பிப்., 5ம் தேதி இத்திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க, அரசு திட்டமிட்டு உள்ளது.