அரசு துறையே அனுமதியின்றி செம்மண் அள்ளுவதா? விசாரணை வளையத்தில் நெடுஞ்சாலை துறையினர்
அரசு துறையே அனுமதியின்றி செம்மண் அள்ளுவதா? விசாரணை வளையத்தில் நெடுஞ்சாலை துறையினர்
UPDATED : ஏப் 19, 2025 02:48 AM
ADDED : ஏப் 19, 2025 12:01 AM

கோவை:கோவை தீத்திபாளையம் கிராமத்தில் பட்டா நிலத்திலும், வருவாய் துறைக்கு சொந்தமான நிலத்திலும், அனுமதியின்றி மண் அள்ளிய விவகாரத்தில், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சிலரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கிறது, கோவை மாவட்ட நிர்வாகம்.
கோவை - பாலக்காடு சாலை மதுக்கரை மைல்கல்லிலிருந்து, 32.4 கி.மீ., தொலைவில் உள்ள மேட்டுப்பாளையம் சாலையை எளிதாக அடைவதற்காக, 324 கோடி ரூபாயில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இச்சாலையில் வழிநெடுக உயர்மட்ட பாலங்கள், தரைமட்ட பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்காக லோடு கணக்கில், கிராவல் மண் தேவைப்படுகிறது. இந்த மண், பல்வேறு கட்டங்களாக அனுமதி பெற்று எடுக்கப்பட்டு வந்தது.
சில நேரங்களில் அனுமதியின்றி மண் எடுப்பதும் நடக்கிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் தீத்திபாளையம் கிராமத்தில், பொதுமக்கள் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் கொண்டு லாரிகளில், நெடுஞ்சாலை துறையினர் செம்மண் அள்ளி, மேற்கு புறவழிச்சாலைப் பணிகளுக்கு பயன்படுத்தினர்.
இது குறித்து, நம் நாளிதழில் நேற்று விரிவான செய்தி வெளியானதையடுத்து, கோவை மாவட்ட கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் பன்னீர்செல்வம், கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் ராம்குமார், உதவி புவியியல் ஆய்வாளர் குமரேசன், பேரூர் தாசில்தார் ரமேஷ், வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், 50 லோடுகளுக்கு மேலாக செம்மண் எடுத்து, மேற்கு புறவழிச்சாலை பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது, ஆதாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து, 'ட்ரோன்' மற்றும், 'ரேடார்' பயன்படுத்தி மண் அள்ளியது குறித்து துல்லியமாக அளந்து வருகின்றனர்.
இதற்கு காரணமான நெடுஞ்சாலை துறையினரை, மாவட்ட நிர்வாகம் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளது.